| ADDED : ஆக 11, 2011 03:40 AM
ப.வேலூர் : முன் விரோதம் காரணமாக, பெண் போலீஸை அரிவாளால் வெட்டித் தலைமறைவான, தந்தை, மகன் உள்பட நான்கு பேரை, போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.ப.வேலூர், ஜமீன் இளம்பிள்ளை அடுத்த நல்லாகவுண்டம்பாளையத்தை சேர்ந்த பிரபாகரன் மனைவி வேலுமணி (36). அவர், திருச்செங்கோடு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸாக பணியாற்றி வருகிறார். அவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவருக்கும் நிலப்பிரச்னை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வேலுமணியின் கணவர் பிரபாகரன், தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பழனிசாமிக்கும், பிரபாகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த வேலுமணி, சம்பவ இடத்துக்குச் சென்று பழனிச்சாமியிடம் தட்டிக்கேட்டார்.ஆத்திரமடைந்த பழனிசாமி, அங்கிருந்த அரிவாளை எடுத்து வேலுமணியை வெட்டினார். படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து நல்லூர் போலீஸில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீஸார், தலைமறைவாக உள்ள பழனிசாமி, ரமேஷ் உள்பட நான்கு பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.