ரூ.11 லட்சம் வழிப்பறி வழக்கில் சிக்கிய போலி போலீஸ்காரர் சிறையில் அடைப்பு
ஓமலுார், வழிப்பறி வழக்கில் சிக்கி, அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த, போலி போலீஸ்காரரை போலீசார் சிறையில் அடைத்தனர்.நாகப்பட்டினத்தை சேர்ந்த ராபிசாகிப், 51, கட்டட கான்ட்ராக்டர். இவர் கார் வாங்குவதற்காக, 11 லட்சம் ரூபாயுடன், வேலுாரை சேர்ந்த கார் புரோக்கர் அலியுடன், கிருஷ்ணகிரியிலிருந்து சேலம் நோக்கி காரில் கடந்த, 5ம் தேதி புறப்பட்டனர். தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை தீவட்டிப்பட்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஜோடுகுளி அருகே மதியம், 3:00 மணிக்கு வந்து கொண்டிருந்த போது, போலீஸ் உடையில் இருந்த நான்கு பேர் காரை நிறுத்தினர். பணத்தை காரில் வைத்து விட்டு ராபிசாகிப் கீழே இறங்கிய போது, பணத்துடன் அலி காரில் தப்பிச் சென்றார்.இதேபோல், போலீஸ் உடையில் வந்த நபர்களும் அவர்கள் வந்த காரை எடுத்து தப்பித்தனர். அதில் பவன்குமார், 24, என்ற நபர் மட்டும் சிக்கினார். பொதுமக்கள் பவன்குமாரை நன்கு கவனித்து, தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். 3 நாட்களாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பவன்குமார், நேற்று சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அளித்த தகவல்படி, போலி போலீஸ் உடையில் வந்த வேலுார், கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்களை போலீசார் தேடி சென்றுள்ளனர்.