| ADDED : நவ 27, 2025 02:38 AM
ஏற்காடு, ஏற்காட்டில் சில நாட்களாக, கடும் பனி, சாரல் மழை பெய்தது. நேற்று காலை முதல் லேசான வெயில் தென்பட்டது. இருப்பினும் கடுங்குளிரும் நிலவியது. மாலையில் பலத்த காற்று வீச, ஆங்காங்கே இருந்த சிறுசிறு மரக்கிளைகள் முறிந்தன. மாலை, 6:30 மணிக்கு ஒண்டிக்கடை ரவுண்டானா அருகே, நாகலுார் செல்லும் சாலை ஓரம் இருந்த சவுக்கு மரம் வேருடன் சாய்ந்து, மின்கம்பம் மீது விழுந்தது. இதில் கம்பம் உடைந்தது. கம்பிகள் அறுந்து விழுந்ததால், 20க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. முறிந்த மரம் சாலை குறுக்கே விழுந்ததால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள், போலீசார், தீயணைப்பு துறையினர் இணைந்து, மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர். இதனால், ஒரு மணி நேரத்துக்கு பின் போக்குவரத்து சீரானது. தொடர்ந்து மின்கம்பத்தை சரிசெய்யும் பணி முடிந்த பின், அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நாகலுார், பட்டிப்பாடி, வேலுார், செம்மநத்தம், கரடியூர் உள்பட, 20க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.