வாத்திப்பட்டி ஏரியில் நின்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ஜலகண்டாபுரம்: மேட்டூர் உபரி நீர் மூலம், வாத்திப்பட்டி ஏரிக்கு உடனே தண்ணீர் கொண்டு வரக்கோரி, காவிரி உபரி நீர் நடவடிக்கை குழுவினர், அந்த ஏரி பகுதியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே நரியம்பட்டியில், வாத்திப்பட்டி ஏரி, 15 ஏக்கரில் உள்ளது. இதை சுற்றி, 300 விவசாய குடும்பத்தினரும், 500 ஏக்கரில் பாசன வசதி பெறுகின்றனர். இந்த ஏரி, மேட்டூர் உபரி நீரேற்றும் திட்டம் - 2ல் உள்ளது. ஆனால் உடனே தண்ணீர் கொண்டு வரக்கோரி, நேற்று காலை, வாத்திப்பட்டி ஏரியில் காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலர் சீனிவாசன் தலைமை வகித்தார். அதில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆதரவாக நங்கவள்ளி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ராமர் பங்கேற்றார்.இதுகுறித்து குழுவின் மாநில செயலர் ரமேஷ் கூறுகையில், ''ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் நங்கவள்ளி ஏரியில் இருந்து, வாத்திப்பட்டி ஏரிக்கு நீரேற்றும் பணியை அதிகாரிகள் உடனே தொடங்க வேண்டும். இந்த வழியில் உள்ள நரியம்பட்டி, தாசனுார், சின்னாகவுண்டம்பட்டி, காட்டம்பட்டி, நாச்சம்பட்டி ஏரிகளையும் நிரப்ப வேண்டும். வெள்ளாளபுரம் ஏரியிலிருந்து திறக்கப்படும், தென்கரை மதகிலிருந்து வெளியேறும் கால்வாய் கரைகள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க வேண்டும். வெள்ள சேதம் ஏற்படும் முன் அதிகாரிகள் கால்வாய், ஏரிகளை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.