மகன் மீது நடவடிக்கைகோரி தந்தை தீக்குளிக்க முயற்சி
சேலம், ஓமலுார் அருகே, வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, 65. விவசாயியான இவர், நேற்று மதியம் கலெக்டர் அலுவலகம் வந்தார்.பின், நுழைவாயில் முன், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் மீது தண்ணீர் ஊற்றி சமாதானப்படுத்தினர்.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். பின், பழனிசாமி கூறுகையில்,'' தனது வீடு, சொத்து அனைத்தையும் மகன் எழுதி வாங்கி கொண்டு, வீட்டையும் விற்று விட்டு, என்னை தனியாக வெளியேற்றி விட்டார். எங்கு வாழ்வது என தெரியவில்லை. உண்ண உணவும் இன்றி, தங்க இடமும் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். எனவே இறந்து விடலாம் என நினைத்து, தற்கொலைக்கு முயன்றேன். மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி, என் சொத்தை அபகரித்து வீட்டை விட்டு விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுத்து, வீட்டை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு கூறினார்.