உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி லாரி உரிமையாளர் தற்கொலை

நிதி நிறுவன ஊழியர்கள் நெருக்கடி லாரி உரிமையாளர் தற்கொலை

மகுடஞ்சாவடி, மகுடஞ்சாவடி அருகே காளிகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சேகர் 48. இவரது மனைவி விஜயா, 41. இவர்களுக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர். சேகர், வீடு அருகே உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள மரத்தில், நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி, மகுடஞ்சாவடி போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:சேகர், சங்ககிரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, டாரஸ் லாரி வாங்கி ஓட்டி வந்தார். 3 மாதங்களுக்கு முன், நெஞ்சு வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் கடனை முறையாக செலுத்த முடியாத நிலையில் இருந்தார். ஆனால் நிதி நிறுவன ஊழியர்கள், வீட்டுக்கு வந்து பணம் கட்டும்படி நெருக்கடி கொடுத்துள்ளனர். மன உளைச்சலுக்கு ஆளான சேகர், தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன், 'கடன் கொடுத்தவர்கள் கொடுத்த நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்கிறேன்' என, வீடியோ பதிவு செய்து, உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். மேலும் கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார். நிதி நிறுவனத்தினரிடம் விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்நிலையில் விஜயா, அவரது மகன், உறவினர்களுடன், சங்ககிரி டி.எஸ்.பி., அலுவலகம் சென்று, 'கணவர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார். அதற்கு டி.எஸ்.பி., சிந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை