நிதி நிறுவன மோசடி வழக்கு; ஒரே நாளில் 15 பேர் புகார்
சேலம்: மேட்டூர், விருதாசம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி, 63. இவர் மேட்டூர் அருகே, ராமன் நகர் புதுச்சாம்பள்ளி மற்றும் மேட்டூர் அணை பகுதியில், 1995ல், குறிஞ்சி நிதி நிறுவனத்தை தொடங்கினார்.தொடர்ந்து, அதிக வட்டி தருவதாக முதலீடு பெற்று நடந்த மோசடி தொடர்பாக, கடந்த, 20ல், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ராமசாமியை கைது செய்தனர்.புதுச்சாம்பள்ளியை சேர்ந்த லாரி அதிபர் ஸ்ரீகாந்த் கொடுத்த புகாரில், 48.79 லட்சம் ரூபாய் மோசடி உள்பட, 150 பேரிடம் பண மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனால் பாதிக்கப்பட்டவர்கள், அசல் ஆவணம், அடையாள அட்டையுடன் புகார் தரும்படி, போலீசார் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, 15 பேர், நேற்று மட்டும் புகார் அளித்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'இதுவரை பெற்ற புகாரில் மோசடி தொகை, 2 கோடி ரூபாயை தாண்டிவிட்டது. விடுபட்டவர்கள் இனியும் காலம் கடத்தாமல் புகார் கொடுத்தால் அடுத்தகட்ட மேல் நடவடிக்கை தொடரும். அதேநேரம் ராமசாமி சார்பில் ஜாமின் கேட்டு, கோவை, 'டான்பிட்' நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என்றனர்.