நிதி நிறுவனம் டார்ச்சர் தொழிலாளி தற்கொலை
மகுடஞ்சாவடி: சேலம் மாவட்டம் இடங்கணசாலை நகராட்சி மாட்டையாம்பட்டியை சேர்ந்த, தறித்தொழிலாளி மணி, 52. இவரது மனைவி மகேஸ்வரி, 37. இவர்களது மகன் மதன் 21, வேலுாரில், 'அக்ரி' 2ம் ஆண்டும், மகள் தர்ஷினி, 19, சங்ககிரியில், பி.எஸ்சி., முதலாண்டும் படிக்கின்றனர். நேற்று கோவிலுக்கு சென்றுவிட்டு, மதியம், 3:00 மணிக்கு மகேஸ்வரி வீட்டுக்கு வந்தார்.அப்போது கதவு உட்புறம் தாழிடப்பட்டிருந்தது. ஜன்னலை திறந்து பார்த்தபோது, மணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மணி, அவரது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து, ராசிபுரத்தில் செயல்படும், தனியார் நிதி நிறுவனத்தில், 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். மாதந்தோறும், 11,500 ரூபாய் செலுத்தி வந்தார். இந்த மாத தவணையை செலுத்தாததால், நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள், மணி வீட்டுக்கு வந்து தகாத வார்த்தையில் பேசியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, மணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. இருப்பினும் தொடர்ந்து விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.