மேலும் செய்திகள்
முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
29-Aug-2025
சேலம், சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லுாரியில், நேற்று முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் தேவி மீனாள் தலைமை வகித்தார். துணை முதல்வர் செந்தில்குமாரி வரவேற்றார். முதலாம் ஆண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டில், 15 பேர், மாநில ஒதுக்கீட்டில், 85 பேர், இவர்களில் 6 பேர் அரசுப்பள்ளிகளில் படித்து, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் பிடித்தவர்கள் என மொத்தம், 100 பேர் சேர்ந்துள்ளனர்.கல்லுாரி முதல்வர் தேவி மீனாள் பேசுகையில்,'' மருத்துவக் கல்லுாரியில் அனைத்து வசதிகளும் உள்ளன. இவற்றை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மொபைல் போன் பயன்பாட்டை குறைத்து, விளையாட்டு, கலைகள் என மற்ற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இன்று முதல் நவ., 9 வரை பாடத்திட்டங்கள், நடைமுறைகள் குறித்த பவுண்டேசன் கோர்ஸ் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடத்தப்படும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 100 சீனியர் மாணவர்கள் தேவையான உதவி, ஆலோசனைகளை வழங்குவர்,'' என்றார்.முன்னதாக புதிதாக மருத்துவக்கல்லுாரிக்கு வந்த மாணவர்களை, சீனியர் மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து, கை குலுக்கி இனிப்பு கொடுத்து வரவேற்றனர். மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார், பேராசிரியர் ராஜேஷ் செங்கோடன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இருட்டில் நடந்த விழாமுதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா கல்லுாரி கலையரங்கில் காலை, 10:00 மணிக்கு துவங்கியது. அதற்கு முன் மின் தடை ஏற்பட்டது. இதனால் கலையரங்க மேடை இருட்டாக இருந்த நிலையில், முதல்வர் குத்துவிளக்கு ஏற்றினார். துணை முதல்வர் செந்தில்குமாரி வரவேற்புரை முடித்து, துறை தலைவர்கள் பேசி முடிக்கும் வரை, ஒரு மணி நேரத்துக்கும் மேல் மின்சாரம் இல்லாமல் இருட்டிலேயே விழா நடந்தது.
29-Aug-2025