இலவச திருமணம் மணமக்களுக்கு அழைப்பு
வீரபாண்டி: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு மண்டலத்திலும் முக்கிய கோவில்களில் சீர் வரிசை பொருட்களுடன் ஏழைகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அதன்படி, 2024 - 2025 ஆண்டுக்கு, மணமக்கள் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.அதில் மணமக்களுக்கு வழங்கப்படும் சீர் வரிசை பொருட்கள் பட்டியல் அச்சடிக்கப்பட்டுள்ளது. 4 கிராம் எடையில் தங்க திருமாங்கல்யம், மணமக்கள் ஆடை, மணமக்கள் வீட்டினர் சார்பில், 20 பேருக்கு அறுசுவை விருந்து, பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கை கடிகாரம், மிக்ஸி, மாலை, பூஜை பொருட்கள், பாத்திரங்கள் என, 60,000 ரூபாய் மதிப்பில் பொருட்கள் வழங்கப்படும். இலவச திருமணம் செய்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், கோவில் அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.