உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தங்கம் ஒரு பவுன் 97,500க்கு விற்பனை லட்சத்தை நோக்கி நகர்வதால் அதிர்ச்சி

தங்கம் ஒரு பவுன் 97,500க்கு விற்பனை லட்சத்தை நோக்கி நகர்வதால் அதிர்ச்சி

சென்னை, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை பவுனுக்கு, 2,400 ரூபாய் அதிகரித்து, 97,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. லட்சத்தை நோக்கி பயணிக்கும் பவுன் விலை, ஓரிரு நாளில் அதை எட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கையால், பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கள் நிதி பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். எனவே, கடந்த ஒரு மாதமாக சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நம் நாட்டில், அதன் விலை தினமும் உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 11,900 ரூபாய், பவுன், 95,200 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. வெள்ளி கிராம், 206 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 300 ரூபாய் உயர்ந்து, 12,200 ரூபாய்க்கு விற்பனையானது. பவுனுக்கு அதிரடியாக, 2,400 ரூபாய் அதிகரித்து எப்போதும் இல்லாத வகையில், 97,600 ரூபாயாக உயர்ந்தது.இம்மாதம், 1ம் தேதி பவுன், 87,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த மூன்று வாரங்களில் மட்டும் பவுனுக்கு, 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், இன்னும் சில தினங்களிலேயே பவுன் தங்கம் விலை, 1 லட்சம் ரூபாய் என்ற இமாலய உச்சத்தை தொடும் நிலை உருவாகியுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு, 3 ரூபாய் குறைந்து நேற்று, 203 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்தாண்டு ஜன., 1ல் தங்கம் கிராம், 7,150 ரூபாய்க்கும், பவுன், 57,200 ரூபாய்க்கும் விற்பனையானது. பத்து மாதங்கள் கூட முழுதுமாக முடிவடையாத நிலையில், தங்கம் விலை கிராமுக்கு, 5,050 ரூபாயும், பவுனுக்கு, 40,400 ரூபாயும் அதிகரித்துள்ளது.இதுகுறித்து, பொருளாதார நிபுணர் நாகப்பன் கூறியதாவது: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பின், கடந்த ஒன்பது மாதங்களில் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு, 10 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே, டாலர் மதிப்பு குறைந்துள்ளதால், அதிக டாலர் கொடுத்து, தங்கத்தை வாங்க வேண்டியுள்ளது. இதனால் மட்டுமே தங்கம் விலை, 10 சதவீதம் உயர்ந்துள்ளது. சர்வதேச முதலீட்டாளர்களும் தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். இதுபோன்ற காரணங்களால், சர்வதே சந்தையில் தங்கம் விலை உயர்ந்து உள்ளதால், நம் நாட்டிலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !