தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 8 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
சேலம், சேலம், வேடுகத்தாம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரையும், இவரது நண்பரையும், கடந்த மாதம், 16ல் திருமலைகிரியை சேர்ந்த காளியப்பன், 24, தங்கராஜ், 27, இளங்கோ, 18, சூரியா, 21, பிரகாஷ், 21, கவினேஷ், 19, ஆகியோர் கடத்தி, வேடுகத்தாம்பட்டியில் கத்தியால் தாக்கி கொலை செய்தனர். இந்த வழக்கில் இரும்பாலை போலீசார், காளியப்பன் உள்பட, 6 பேரையும் கைது செய்தனர். காளியப்பன் மீது, இரும்பாலை போலீஸ் ஸ்டேஷனில் ஏற்கனவே ஒரு வழக்கு இருந்தது விசாரணையில் தெரிந்தது.அதேபோல் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், பாவடி தெருவை சேர்ந்த பிரசாத், 23, கடந்த மாதம், 20ல், ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த, 2 கிலோ கஞ்சாவை, சேலம் புது பஸ் ஸ்டாண்டில் வைத்து விற்க முயன்றபோது, மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். அவர் மீது, நாமக்கல்லில் ஏற்கனவே, கஞ்சா விற்றதாக, இரு வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதுதவிர, சேலம், கிச்சிப்பாளையம், புது சுண்ணாம்பு சூளையை சேர்ந்த ஆனந்த், 35, என்பவர், கடந்த மாதம், 15ல், அதே பகுதியில் நடந்து சென்ற அருண்குமார் என்பவரை கத்தி முனையில் மிரட்டி, 3,000 ரூபாயை பறித்தார். டவுன் போலீசார், ஆனந்தை கைது செய்தனர். அவர் மீதும், வழிப்பறி, திருட்டு வழக்குகள் ஏற்கனவே பதிவாகி இருந்தன. இதனால், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட, 8 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.