கணவனை தாக்கி மனைவி கடத்தல் காதல் பட பாணியில் ஆக் ஷன்
சேலம்: மாணவியை காதலித்து திருமணம் செய்த கல்லுாரி பஸ் டிரைவரை தாக்கி, பெண்ணை காரில் கடத்திய உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம், காடையாம்பட்டி, லோகூரை சேர்ந்தவர் ஞானசேகரன், 31; சேலம், மாமாங்கத்தில் உள்ள தனியார் கல்லுாரி பஸ் டிரைவர். அதே கல்லுாரியில், ஓமலுார், மாட்டுக்காரனுாரை சேர்ந்த செந்தில்குமார் மகள் திவ்யா, 21, பி.காம்., மூன்றாமாண்டு படித்தார். தினமும் கல்லுாரிக்கு பஸ்சில் சென்று வந்த நிலையில், டிரைவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.ஜூன் 6ல் வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி, பழனியில் திருமணம் செய்து கொண்டனர். ஞானசேகரனின் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் முடிந்து, 7ல் வீடு திரும்பினர். அன்று மாலை 4:30 மணிக்கு, மனைவியுடன் ஞானசேகரன், வலசையூரில் வசிக்கும் அக்கா லட்சுமி வீட்டிற்கு ஸ்பிளண்டர் பைக்கில் புறப்பட்டார்.இதையறிந்து, மூன்று கார்களில் பின்தொடர்ந்த பெண்ணின் உறவினர்கள், தம்பதியை வழிமறித்து மிரட்டி, வலுக்கட்டாயமாக காரில் கடத்தினர். மாமாங்கம், டால்மியா போர்டு அருகே தம்பதியை இறக்கி, திவ்யாவை மற்றொரு காருக்கு மாற்றினர். தொடர்ந்து அவரது கண்ணெதிரே, ஞானசேகரனை சரமாரியாக தாக்கிவிட்டு, திவ்யாவை மட்டும் அழைத்துச் சென்றனர்.காதல் சினிமா பட பாணியில் நடந்த இந்த சம்பவம் பற்றி ஞானசேகரன் புகாரில், மருத்துவமனை போலீசார் விசாரித்தனர். கடத்தல் சம்பவம் நடந்த இடம், உயிரியல் பூங்கா என்பதால், கன்னங்குறிச்சி போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.