உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நடப்பு கல்வியாண்டில் புது நடைமுறை தொழில்நுட்ப கல்வி கமிஷனர் தகவல்

நடப்பு கல்வியாண்டில் புது நடைமுறை தொழில்நுட்ப கல்வி கமிஷனர் தகவல்

ஓமலுார், ''இன்டர்னல்- 40; எக்ஸ்டர்னல்- 60, எம்.சி.க்யூ., வடிவில் தேர்வு முறை, செய்முறை தேர்வு ஆகிய புது நடைமுறைகள் நடப்பு கல்வியாண்டில் பின்பற்றப்படும்,'' என, தொழில்நுட்ப கல்வி கமிஷனர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.அரசு பாலிடெக்னிக் முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி, சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரியில், நேற்று நடந்தது. அக்கல்லுாரி முதல்வர் கீதா(பொ) தலைமை வகித்தார். தொழில்நுட்ப கல்வி கமிஷனர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:அரசு பாலிடெக்னிக்கில் படிக்க வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்களாகவும், வழிகாட்டியாகவும், ஆலோசகர்களாகவும், நாம் இருக்க வேண்டும். நாம் அளிக்கக்கூடிய தகவல்கள் அனைத்தையும், மாணவர்கள் உள்வாங்கி, அவற்றை கையாளும் திறனை வளர்க்க வேண்டும். ஒரு மாணவரை, ஆண்டுக்கு ஒரு முறையாவது, துறை சார்ந்த போட்டியில் பங்கேற்க செய்ய வேண்டும். நடத்திய பாடத்தில் மறுநாள் தேர்வு வைத்து மதிப்பிட வேண்டும். மாணவர்களின் கல்வி தரத்தை, ஆசிரியர் கண்காணிக்க வேண்டும்.தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். அதற்கான தேர்வு மதிப்பீடு முறைகளும் மாற்றப்பட்டுள்ளது. இன்டர்னல்- 40, எக்ஸ்டர்னல்- 60, எம்.சி.க்யூ., வடிவில் தேர்வு முறை, செய்முறை தேர்வு ஆகிய புது நடைமுறைகள் நடப்பு கல்வியாண்டில் பின்பற்றப்படும். இதன்மூலம் மாணவர்களின் எதிர்காலம், வேலைவாய்ப்பு நன்றாக அமையும். அதற்கு இந்த பயிற்சி உங்களுக்கு உதவும். இவ்வாறு அவர் பேசினார்.பாலிடெக்னிக் கல்வி இயக்கக கூடுதல் இயக்குனர் சீனிவாசன், கோவை, ஈரோடு, கரூர், நீலகிரி, தேனி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள, அரசு பாலிடெக்னிக் முதல்வர்கள், ஆசிரியர்கள் என, 400 பேர் பங்கேற்றனர். ஏற்கனவே திருநெல்வேலி, திருச்சியில், இப்பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது சேலத்தில் நடந்துள்ளது.மாணவர் சேர்க்கை50 சதவீதமாக சரிவுமாநில உயர்கல்வித்துறை மன்ற துணைத்தலைவர் விஜயகுமார் பேசியதாவது: தொழில் துறைக்கு டிப்ளமோ மாணவர்கள் முதுகெலும்பாக உள்ளனர். அதனால் அதிக நபர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை, 50 சதவீதமாக குறைந்துள்ளது. மாணவர்கள் அடிப்படை கல்வியை புரிந்து படிக்கும்படியும், அதை கையாளும்படி, தகுதி, திறனை வளர்க்க வேண்டும். இவை எல்லாம் ஆசிரியரான உங்களிடம் உள்ளது. மாணவர்களை அதிக நேரம், 'லேப்'பில் ஈடுபடுத்த வேண்டும். 1,000 மாணவர்களின் வாழ்க்கை, உங்கள் கைகளில் உள்ளன. மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே போனால், ஆசிரியர் பணிக்கு பாதிப்பு ஏற்படும். ஆசிரியர்கள், மாணவர்களின் நலன் மீது அதிக அக்கறை காட்ட வேண்டும். அதற்கு இப்பயிற்சி மிக முக்கியம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ