வரகில் ஊடுபயிர் அவசியம்; வேளாண் துறை அறிவுரை
வீரபாண்டி: வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் கார்த்திகாயினி அறிக்கை: பொதுவாக வரகு தனிப்பயிராக மட்டும் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் பாதுகாப்பான விளைச்சல், மண் வளத்தை காத்து வருமானத்தை அதிகரிக்க, ஊடுபயிர் செய்வது அவசியம். வரகுடன் ஊடுபயிராக துவரை, அவரை, நிலக்கடலை ஆகிய ஏதாவது ஒன்றை, 8 வரிசை வரகுக்கு, இரு வரிசை ஊடுபயிர் என்ற விகிதத்தில் விதைக்க வேண்டும். இதன்மூலம் வரகு பயிரின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, ஊடுபயிரால் கூடுதல் லாபம் பெறலாம். வறண்ட, மானாவாரி, மண் வளம் குறைவாக உள்ள நிலங்களிலும் ஊடுபயிராக நிலக்கடலை, பச்சை பயறு, உளுந்து போன்ற பயறு வகைகளை சாகுபடி செய்யும்போது, மண் வளம் காக்கப்படுகிறது. இந்த முறை சாகுபடிக்கு தண்ணீர், இடுபொருள், பூச்சிக்கொல்லி ஆகியவை குறைந்த அளவு போதும். நோய் தாக்குதல், களை எடுத்தல் பாதிப்புகள் அதிகம் இருக்காது. அறுவடைக்கு பின் வரகு தட்டை, பயறுகளின் கொடிகளை, கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். வரகு சாகுபடியில் உற்பத்தி திறனை அதிகரித்து கூடுதல் லாபம் பெற ஊடுபயிர் சாகுபடி முறை சிறந்தது.