பள்ளி சமையல் அறையில் ரசாயன பவுடர் வீசி சென்ற நபர்கள் குறித்து விசாரணை
கெங்கவல்லி: தெடாவூர் அரசு தொடக்கப் பள்ளியில், ரசாயன பவுடர் வீசிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே தெடாவூர் மேற்கு பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. 45 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்குள்ள சமையல் அறை பகுதியில் சில தினங்களுக்கு முன், மர்ம நபர்கள் சிலர் மதுபாட்டில்களை வீசிச் சென்றனர். அதன்பின், பள்ளி நிர்வாகம் சார்பில், 'பள்ளி வேலை நாள், விடுமுறை நாளில் மாணவ, மாணவியர், பெற்றோர் தவிர மற்றவர்கள் உள்ளே வரக்கூடாது. பள்ளி சொத்துகளை சேதப்படுத்துதல், தீய செயல்களில் ஈடுபடுவது கண்டறிந்தால் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்' என, சுவர்களில் 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டிருந்தது.இந்நிலையில், நேற்று காலை பள்ளி மற்றும் சமையல் அறையை திறந்தனர். அப்போது சமையல் அறைக்குள் ரசாயன பவுடர் துாவி விட்ட நிலையில் இருந்தது. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அளித்த புகார்படி, கெங்கவல்லி போலீசார் சமையல் அறையில் கிடந்த ரசாயன பவுடரை ஆய்வுக்கு எடுத்துச் சென்று, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.சமையல் அறையில் பவுடரை துாவிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். பவுடரை அகற்றிவிட்டு, தண்ணீர் மூலம் சுத்தம் செய்த பின், மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.