உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அன்பு ஒன்றே அனைவரையும் ஒன்றிணைக்கும்

அன்பு ஒன்றே அனைவரையும் ஒன்றிணைக்கும்

சேலம், ஆயர் இல்லம், சேலம் மறைமாவட்ட ஆயர், மேதகு அருள்செல்வம் ராயப்பன் அறிக்கை:'இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக பிறந்திருக்கிறார்(லுாக்கா 2:11). அனைவருக்கும் என் அன்பான கிறிஸ்துமஸ் பெருவிழா வாழ்த்துகள், ஆசீர்வாதத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்நாள், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பேரன்பையும், பேரிரக்கத்தையும், நமக்கு நினைவூட்டுகின்றன. மனுக்குலம் அனைத்துக்கும் ஒளியையும், மீட்பையும் கொண்டு வர, குழந்தை இயேசு, இவ்வுலகுக்கு வந்த நாள். கிறிஸ்து பிறப்பு என்பது வாழ்வின் விழா. வார்த்தை மனுவுருவான விழா. மகிழ்வின் பெருவிழா. அரசுரிமை என்ற பதவி அதிகாரத்தால், எத்தனையோ குழந்தைகளை கொன்று குவித்த ஏரோதுகளின் மத்தியில், அன்பு, அமைதி, ஆறுதல் அளிக்க, மனித நேயம் கொண்டவர், மனுக்குலத்தில் மனிதனாய் தோன்றி, மனங்களை மகிழச்செய்த மகிழ்ச்சியின் நாள். ஞானிகள், இடையர்கள், வானதுாதர்கள் என, அனைவரும் மீட்பை கொண்டு வர வந்தவரை சந்திக்க கூடியது போல, நாமும் இன்றைய கிறிஸ்து பிறப்பு பெரு விழாவில், வறுமையில் வாடுவோரை, வாழ்வை தேடுவோரை, ஏழ்மையில் தவிப்போரை சந்திக்க ஒன்றிணைய வேண்டும்.அன்பு என்னும் விதையை விதைத்திட, அடிமை என்னும் சிறையை உடைத்திட, எளிமை என்னும் வாழ்வை ஏற்றிட, கடவுளின் வார்த்தைக்கு இசைவு கொடுத்த மரியன்னையை போல, நாமும் இறை, இரக்க செயல்பாடுகளுக்கு தினமும் இசைவு கொடுப்போம். அறத்தை கடைப்பிடித்து, சினத்தை விட்டொழித்து, கடந்த ஆண்டுகளின் கசப்பான அனுபவங்கள், நம்மில் இருந்து நீங்கி, இயேசு பாலன் அவதரித்த, இப்புனித திருநாளில், அன்பு ஒன்றே அனைவரையும் ஒன்றிணைக்கும் என்பதை முழுமையாய் உணர்வோம்.இவ்வுலகின் சவால்கள், நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில், குழந்தை இயேசுவின் பிறப்பு, ஒரு ஒளி மயமான எதிர்காலத்தையும், நம்பிக்கையையும், நல்லிணக்கத்தையும் வளர்ப்பதற்கான ஒரு வாய்ப்பு. விவிலியத்தில் உள்ள திருப்பாடல், 86:11 கூறுவது போல, 'ஆண்டவரே உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு உமது வழியை எனக்கு கற்பியும். உமது பெயருக்கு அஞ்சுமாறு என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்' என நாமும் செபிப்போம். குழந்தை இயேசுவின் இறையாசீர், உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நிரப்புவதாக.

'சந்தோஷ வாழ்க்கை அமைய வாழ்த்துகிறேன்'

சேலம், ேஹாலிகிராஸ் இன்டர்நேஷனல் பள்ளி(சி.பி.எஸ்.இ.,) முதல்வர் ஸ்டீபன் ஆனந்தராஜ் அறிக்கை: இந்த புனித காலம் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம், நிம்மதியை வழங்கிடட்டும். இயேசுவின் ஆசீர்வாதங்கள் உங்கள் கனவுகளையும் இலக்குகளையும் நிறைவேற்ற துணை புரியட்டும். நம் அனைவருக்கும், ஒற்றுமையுடனும் அன்புடனும் சந்தோஷ வாழ்க்கை அமைந்திட வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துகள்.

'ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும்'

சேலம், ஜான் கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் ஜான் கென்னடி அறிக்கை: இயேசு கிறிஸ்து, பூமியில் மனிதராக அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். உலகம் முழுதும் உற்சாகமாக கொண்டாடப்படும், இப்பண்டிகை, அன்பையும், தியாகத்தையும், போதிக்கும் ஓர் திருநாள். டிச., 25ல் கொண்டாடப்படுகிறது. உலகின் பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் பண்டிகையாக, இது திகழ்கிறது. மதங்களை கடந்து, ஒற்றுமையின் சின்னமாக கிறிஸ்துமஸ் விளங்குகிறது.பெத்லகேம் நகரில் மாட்டு தொழுவத்தில் புனித மரியாள், யோசேப்புக்கு மகனாக இயேசு கிறிஸ்து அவதரித்தார். கார் குளிரில் பிறந்தார். வான துாதர்கள், இயேசுவின் வருகையை அனைவருக்கும் அறிவித்தனர். வானத்து நட்சத்திரங்கள் எல்லாம், பூமியில் பிறந்த அந்த சூரியனை வணங்கின. ஞானிகள், இயேசுவை வணங்கிச்சென்றனர். இடையர்கள், அவரை ஆராதித்தனர்.கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது வீடுகள், பேராலயங்களில், இயேசு கிறிஸ்து அவதரித்ததன் அடையாளமாக, குடில் கட்டி, குழந்தை இயேசு, அன்னை மரியாள், புனித சூசையப்பர், இடையர்கள், ஞானிகள், பொம்மைகள் வைக்கின்றனர். இந்த விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமல் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். மேலும், இறைவன் எளிமையின் வடிவானவர். எளியவர்களுக்காக வாழ்கிறார். எளியவனாகவே இருப்பவர். இதைத்தான் கிறிஸ்து பிறப்பு, இந்த உலகுக்கு உணர்த்துகிறது. இத்திருநாளில் கருணையின் வடிவான இயேசுவின் பாதையில் வழி நடந்து, ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும்.

'குடும்பத்தினர், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாடுங்கள்'

சேலம், ேஹாலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேசுராஜ் அறிக்கை: இந்த புனித கிறிஸ்துமஸ் காலம், உங்கள் இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்பி, உங்கள் வாழ்வில் அமைதி, நிம்மதியை பரப்பிடட்டும். நாம் அனைவரும், அன்புடனும் கருணையுடனும் இணைந்து ஒற்றுமையுடன் இப்பண்டிகையை கொண்டாட வேண்டும். இயேசுவின் ஆசீர்வாதங்கள், உங்கள் ஒவ்வொரு நாளிலும் திகழ்ந்து, உங்கள் வாழ்வில் வெற்றி, ஆரோக்கியம், நிம்மதியை வழங்கட்டும்.இத்தருணம் உங்கள் கனவுகள், இலக்குகளுக்கு புது திசை மாற்றமாக அமைந்திடட்டும். புத்தாண்டு, உங்களுக்கு புது தொடக்கங்களையும், சிறப்பான தருணங்களையும் வழங்கி உங்கள் வாழ்வை சிறப்பாக மாற்றட்டும். இப்பண்டிகையின் மகிழ்ச்சியை, உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டாடுங்கள். அனைவரின் வாழ்க்கையும் அமைதியான அன்பு, மகிழ்ச்சி நிறைந்ததாக விளங்க, இயேசுவின் வழிகாட்டுதலால், நாம் உயரத்தை குறிக்கோளாக கொண்டு முன்னேறுவோம். அனைவருக்கும் மனமார்ந்த இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துகள்.

'பகையை மறந்து பற்றுதலை வளர்ப்போம்'

சேலம் நோட்ரி டேம் ஆப் ஹோலி கிராஸ் பள்ளி தாளாளர் மரியசுரேஷ் அறிக்கை: இறைவன், இவ்வுலகை அழகாய் படைத்து, அதில் மகிழ்ச்சியாய் வாழ, அவர் சாயலில் மனிதர்களாகிய நம்மை படைத்தார். அன்பு, சமாதானம், மன்னிக்கும் குணம், இவையெல்லாம் இறைவன் நமக்கு தந்த அருங்கொடைகள். இக்கொடைகளை, நாம் பிறருக்கு அளிக்க வேண்டும்.இறைவன், மனிதர்களாகிய நம்மிடம் அதிகம் எதிர்பார்ப்பது, அவர் பிள்ளைகளாகிய நாம், ஒருவர் பிறர் செய்த குற்றங்களை மன்னித்து, அன்பு செய்து வாழ வேண்டும் என்பதைத்தான். அதனால் தான் அவர், 'நீங்கள் ஒருவர் செய்த குற்றங்களை ஏழு முறை அல்ல; ஏழு எழுபது முறை மன்னியுங்கள்' என்கிறார். ஆனால், நாம் ஒரு முறையாவது மன்னிக்கிறோமா? சற்று சிந்திப்போம். இறைவன் படைப்பில் அனைவரும் சமம். பிறகு எதற்கு, நமக்குள் பகை, போட்டி, பொறாமை. நாம், பிறர் குற்றங்களை மன்னிக்கும்போது, இறைவன் நம் குற்றங்களை மன்னிப்பார். இயேசு கிறிஸ்து, நம்மை எல்லா தீங்கினின்றும் மீட்பதற்காக, மனித உரு கொண்டு பிறந்துள்ளார். அவரது பிறப்பு, அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது.அந்த மகிழ்ச்சி நம் வாழ்நாள் முழுதும் தொடர, நாம் ஒருவரை ஒருவர் அன்பு செய்து, மன்னித்து விட்டுக்கொடுத்து அவரது பிள்ளைகளாக வாழ்வோம். பகையை மறந்து, பற்றுதலை வளர்ப்போம். அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா, புத்தாண்டு வாழ்த்துகள்.

'நாளை உங்களாலும் ஒரு நாள் மழை பெய்யும்'

ஏற்காடு, மான்ட்போர்ட் பள்ளி முதல்வர் டோமினிக் சேவியோ அறிக்கை: இயேசு கிறிஸ்து பிறப்பின் நோக்கம், அனைவருக்கும் நம்பிக்கை அளிப்பதே. அவர் நம்மிடம் விட்டுச்சென்ற நம்பிக்கையை, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். உலகை ரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்து, மக்களுக்கு புது வாழ்வை பரிசளிப்பார் என்பதுதான் கிறிஸ்துமஸ் நாளின் நம்பிக்கை. அவரது வருகை, வார்த்தைகளால் பலர் வாழ்வில் வெளிச்சம் ஏற்பட்டது. 'எதிர்நோக்கின் திருப்பயணிகள்'. இதுவே இந்த பெருவிழா கொண்டாட்ட ஆண்டின் தலைப்பு செய்தி. நாமும் அவரது வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு அவர் வழியில் நடந்து, நாளைய தலைமுறைக்கு நம்பிக்கை விதைகளை விதைப்போம். நம்மால் என்ன முடியும் என, நல்லவர்கள் பலரும், உலகில் நடக்கும் அவலங்களை கண்டும் காணாமல் உள்ளனர். ஆனால் உலக உயிர்கள் அனைத்தையும் நேசித்த இயேசு கிறிஸ்து, தனி ஒருவராக இந்த உலகை நல்வழியில் திசை திருப்பியவர். அவர் வாழ்வும் வாக்கும், நம் அனைவருக்கும் என்றும் மாறாத நம்பிக்கையாக திகழ்கிறது. நம்பிக்கை கொள்ளுங்கள். 'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்பது முன்னோர் வாக்கு. நாளை உங்களாலும் ஒருநாள் மழை பெய்யும். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துகள்.

65 அடி உயர ரட்சகர் இயேசு சிலை

வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில், 1957ல் கட்டப்பட்டு, 50 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாட்டில் இருந்த புனித செபஸ்தியார் தேவாலயம், 2008ல், தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது அகற்றப்பட்டது.அப்போதைய சேலம் ஆயர் சிங்கராயர் முயற்சியால், அதே பகுதியில் புது தேவாலயம் கட்டப்பட்டது. அதன் முகப்பில், வாழப்பாடி தொழிலதிபர் லாசர் குடும்பத்தினரின் செலவில், புது பைபர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 15 அடி அகல பாதம், 5 அடி அகல முக அமைப்போடு, 65 அடி உயரத்தில், 20 லட்சம் ரூபாய் செலவில் இயேசுநாதரின் முழு உருவ சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டது. 2013 டிச., 21ல் ஆயர் சிங்கராயரால் அர்ச்சிப்பு செய்து, மக்கள் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அண்மையில் இச்சிலையை, லாசர் குடும்பத்தினர், 3 லட்சம் ரூபாய் செலவில் வண்ணம் தீட்டி புதுப்பித்துள்ளனர். கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வழிபட்டும், கண்டுகளித்தும் வருகின்றனர். உலக ரட்சகர் இயேசு சிலையே, தற்போது இந்தியாவில் மிக உயர்ந்த இயேசு சிலை என, தொழிலதிபர் லாசர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை