| ADDED : பிப் 22, 2024 07:18 AM
சேலம் : தேர்தலுக்கு முன் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க, தி.மு.க.,வை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.சேலம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அதில், தி.மு.க., கவுன்சிலர்கள் பேசியதாவது:ஷாதாஜ்(53வது வார்டு): ஆரம்ப சுகாதார நிலையம், தொடர்ந்து கேட்டு வருகிறேன். சாலை, சாக்கடை வசதிகள் இல்லை. ரேஷன் கடைகள் வாடகை கட்டடங்களில் செயல்படுவதால் பொருட்கள் சேதமாகின்றன. எதிர்க்கட்சி கவுன்சிலர்கள், கூட்டணி கட்சியினரின் வார்டுகளுக்கு எல்லாம் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கிறீர்கள். நம் கட்சி கவுன்சிலரான என் வார்டை கண்டுகொள்வதில்லையே?பழனிசாமி(51வது வார்டு): மணியனுார் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள பூங்கா ஓராண்டாக பராமரிப்பின்றி கிடக்கிறது. அதில் உயர்கோபுர மின் விளக்கு அமைத்து பூங்காவை பராமரிக்க வேண்டும். அங்குள்ள சுடுகாட்டில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். மாநகராட்சி பள்ளி கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் புது கட்டடத்தை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.பூங்கொடி(41வது வார்டு): சத்தியமூர்த்தி தெருவில் போடப்பட்ட சாலையின் ஒரு பகுதி, சிறிது நாட்களிலேயே சேதம் அடைந்து மக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. பாதாள சாக்கடை திட்டம் சரிவர மேற்கொள்ளப்படாததால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. தேர்தல் வரும் முன்பாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.சரவணன்(56வது வார்டு): களரம்பட்டி காய்கறி மார்க்கெட் தொடங்கி அம்மா உணவகம் வரை, சாலை மிக மோசமாக உள்ளது. அப்பகுதியில், 20,000 ஓட்டுக்கள் உள்ளன. அடுத்த கூட்டம் நடப்பதற்குள் தேர்தலும் வந்து விடும். அச்சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.இதற்கு மேயர் ராமச்சந்திரன், ''உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தரப்படும். இதுவரை சேலத்தில், 249 பணிகள், 242 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இனியும் மக்கள் பணி தொடரும். எந்த பணியையும் விடப்போவதில்லை. அனைவரும் ஒத்துழைத்தால் மக்களுக்கு அனைத்து அடிப்படை பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும்,'' என்றார்.