மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ஆட்டையாம்பட்டி, ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் ஆடி தேர் திருவிழா, கடந்த ஜூலை, 30ல் கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, சுவாமி ரத ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, சத்தாபரணம் நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு, திருமணிமுத்தாற்றில் இருந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள், அக்னி கரகம் எடுத்து, அலகு குத்தி, அக்னி குண்டம் இறங்கினர். நேற்று மதியம், 3:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள், 'ஓம் சக்தி' கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து, முக்கிய சாலைகள் வழியே வலம் வந்து கோவிலை அடைந்தனர்.இன்று பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை, பக்தர்கள் பலியிடுகின்றனர். இரவு, 7:00 மணிக்கு கம்பம் பிடுங்கப்பட்டு வேலநத்தம் பாவடி யில் உள்ள கிணற்றில் வைத்து சிறப்பு பூஜை நடக்கிறது. நாளை வண்டி வேடிக்கை, பூந்தேர், பூங்கரக ஊர்வலம், 16ல் வசந்த உற்சவத்துடன், மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.அக்னி திருவிழாபனமரத்துப்பட்டி அருகே ச.ஆ.பெரமனுார் பச்சையம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நேற்று, பச்சையம்மன், பூமலையப்பர், காரடியன், செம்மலையப்பர் உள்ளிட்ட சுவாமிக்கு அபி ேஷகம், அலங்காரம் செய்தனர். மதியம் காரடியான் கோவிலுக்கு சென்று பக்தர்கள் பூஜை செய்தனர். பின் மானியக்காடு கிணற்றில் பக்தர்கள் நீராடி, மஞ்சள் ஆடை அணிந்தனர். அவர்களை, பூசாரி சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். அங்கிருந்து ஊர்வலமாக வந்த பக்தர்கள், கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனர். மேலும் சுவாமி திருவீதி உலா நடந்தது.கருமாரியம்மன் கோவில்ஏற்காடு, முருகன் நகர் கருமாரியம்மன் கோவிலில் திருவிழாவை ஒட்டி நேற்று, பெரிய ஏரியில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தம், பால் குடம் எடுத்துக்கொண்டு, ஜெரீனாக்காடு வழியே கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் பால் அபிஷேகம் செய்து, பூஜை நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், நேர்த்திக்கடன் செலுத்தினர்.