உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் உருக்காலை உள்ளிட்ட 3 ஆலைகள் விரிவாக்கம் அமைச்சர் குமாரசாமி உறுதி

சேலம் உருக்காலை உள்ளிட்ட 3 ஆலைகள் விரிவாக்கம் அமைச்சர் குமாரசாமி உறுதி

வீரபாண்டி: ''சேலம் உருக்காலை உள்ளிட்ட மூன்று ஆலைகள், விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது,'' என, மத்திய அமைச்சர் குமாரசாமி கூறினார்.மத்திய கனரக தொழில் மற்றும் எக்கு துறை அமைச்சராக குமாரசாமி, பொறுப்பேற்ற பின் முதல் முறையாக, நேற்று சேலம் உருக்காலையை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:என் வருகையின் நோக்கமே, உருக்காலையை விரிவுபடுத்துவது தான். சேலம் உருக்காலையில் கடந்த, 15 ஆண்டுகளாக முதலீடு செய்வது குறைந்துள்ளது. ஆனாலும், தொழிற்சாலை மூடப்படாமல் ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை மேம்படுத்தி விரிவாக்கம் செய்வது குறித்து, மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை, நிபுணர்கள் குழுவின் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பின், அதன் அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்படும்.இதற்கு தேவைப்படும் முதலீடு, ஈட்டும் பணத்தை எவ்வாறு திருப்பி தருவது, எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது குறித்து அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் செய்யப்பட்டுள்ளது. சேலம் உருக்காலை மட்டுமன்றி, ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் ஆலை, கர்நாடக மாநிலம் விஸ்வரேஸ்வரய்யா ஆலை ஆகிய மூன்று முக்கிய ஆலைகளையும் விரிவுபடுத்துவது குறித்து, பிரதமர் மோடி வழிகாட்டுதல்படி, டில்லியில் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளது.இதில் மத்திய நிதியமைச்சர், ஆந்திர முதல்வர் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இரண்டு மூன்று மாதங்களுக்கு பின், மீண்டும் சேலம் உருக்காலைக்கு வந்து ஆலோசனை நடத்தப்படும்.இவ்வாறு கூறினார்.ஆய்வின் போது, மத்திய அமைச்சர் குமாரசாமியிடம், சேலம் உருக்காலை சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர், உருக்காலையை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட்டு பொதுத்துறை நிறுவனமாகவே தொடர வேண்டும். புதிய முதலீடுகளை ஈர்த்து, புதிதாக நிரந்தர பணியாளர்களை சேர்க்க வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை விரைவுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ