கருவூட்டல் மூலம் கிடேரி கன்று ஈனுதல் திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர்
சேலம்: ''கருவூட்டல் செய்து கிடேரி கன்றுகள் மட்டும் ஈனும்படியான திட்டம் தொடங்கி, அதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன,'' என, அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.சேலம், கன்னங்குறிச்சியில், கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. அதில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்து பேசியதாவது: சேலம் மாவட்டத்தில், 6.81 லட்சம் கால்நடைகள் உள்ளன. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 149 கால்நடை மருந்தகம், 7 நடமாடும் மருந்தகம், 7 மருத்துவமனை, ஒரு பன்முக மருத்துவமனைகளில் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. கால்நடைகளின் நோய்களை தடுக்க, ஒன்றியத்துக்கு, 20 வீதம், 240 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை பெறலாம்.கால்நடை வளர்ப்போரின் வீடுகளுக்கு சென்று அவசர சிகிச்சை அளிக்க மாவட்டத்தில், 15 நடமாடும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கெங்கவல்லி வட்டத்தில் மேலும் ஒரு வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் கால்நடை வளர்ப்போர் பொருளாதார ரீதியாக மேம்பட, புது தொழில்நுட்பத்தில் பாலின பாகுபாடு செய்யப்பட்ட உறைவிந்து குச்சிகள் மூலம் கருவூட்டல் செய்து கிடேரி கன்றுகள் மட்டும் ஈனும்படியான திட்டம் தொடங்கி, அதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து கன்னங்குறிச்சி டவுன் பஞ்சாயத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி, டவுன் பஞ்சாயத்து தலைவர் குபேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.