குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை; பெண் போலீஸ் மொபைல் போனை கைப்பற்றி விசாரணை
சேலம்: குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது கணவரான போலீஸ்காரருடன் தொடர்பில் இருந்த பெண் போலீஸ்காரரின் மொபைல் போனை வாங்கி விசாரணை நடக்கிறது.சேலம், கொண்டலாம்பட்டி போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் கோவிந்தராஜ், 38. சேலம் அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை போலீஸ்காரராக பணிபுரிகிறார். இவரது மனைவி சங்கீதா, 32. இவர், கடந்த, 17ல் மகன் ரோகித், 8, மகள் தர்ஷிகாஸ்ரீ, 4, ஆகியோருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டார். பின் அவரும் தற்கொலை செய்து கொண்டார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கோவிந்தராஜிடன் ஏற்பட்ட தகராறில் சங்கீதா, அவரது குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்றதாக கூறப்பட்டது. ஆனால் அவர், குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு, துாக்குப்போட்டு கொலை செய்துள்ளார். அப்போது குழந்தைகள் சத்தம் போடாமல் இருக்க வாயில், 'டேப்' சுற்றியுள்ளார். உயிர் தப்பிக்காமல் இருக்க கைகளிலும், 'டேப்' போட்டுள்ளார்.குழந்தைகளை துாக்கில் தொங்கவிட்டதை வீடியோவாக எடுத்த சங்கீதா, அதை கோவிந்தராஜிக்கு அனுப்பியுள்ளார். அவர் வருவதற்குள் சங்கீதாவும் தற்கொலை செய்து கொண்டார். சங்கீதாவுக்கு, கடந்த பிப்ரவரியிலேயே, கோவிந்தராஜிக்கு அவருடன் பணிபுரியும் வேறு ஒரு பெண் போலீசுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அப்போது முதலே, தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் பெண் போலீசுடனான தொடர்பை கைவிடவில்லை என்றால், குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என, சங்கீதா கூறியுள்ளார். அப்போதும் கோவிந்தராஜ் கைவிடவில்லை. மேலும் குடும்பத்தையும் அவர் கண்டுகொள்ளவில்லை. அதேநேரம் அவர் பழகும் பெண் போலீசுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளார். இதுதொடர்பாகவும் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. மேலும் வீட்டில் இருந்து கொண்டே கோவிந்தராஜ், பெண் போலீசுடன் ஆபாச வார்த்தைகளை பேசி வந்துள்ளார். ஆபாச படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இதன் உச்சகட்டமாக சம்பவத்தன்று கோவிந்தராஜ், அந்த பெண் போலீசுடன் ஆபாசமாக பேசியது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த சங்கீதா, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கோவிந்தராஜிடம் இருந்து, அவரது மொபைல் போன் வாங்கி விசாரணை நடக்கிறது. அதேபோல் அவர் தொடர்பில் இருந்த பெண் போலீசிடமும் மொபைல் போன் வாங்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கோவிந்தராஜ் மொபைல் போனில், 'ரெக்கவரி' செய்யப்பட்டு, அதில் இருந்து தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி விசாரணை நடந்து வருகிறது. பெண் போலீசும் பணிக்கு வரவில்லை. அவரை வேறு மாவட்டத்துக்கு மாற்றுவதா, துறை ரீதியதாக, 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுப்பதா என, உயர் அதிகாரிகள் ஆலோசிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.