கழிவுநீர் புகுந்த வயலில் அதிகாரிகள் நேரில் ஆய்வு
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து பகுதியிலிருந்து, ச.ஆ.,பெரமனுார், பள்ளித்தெருப்பட்டி ஊராட்சி பகுதி விவசாய வயலில் கழிவு நீர் புகுந்ததால், 10 ஏக்கரில் பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டது. இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது.பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல்அமீத், தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரியா, ஊரகவளர்ச்சித்துறையினர் ஆகியோர் பாதிக்கப்பட்ட வயலில் நேற்று ஆய்வு செய்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,' ஒரே இடத்தில், நீண்ட காலமாக கழிவு நீர் தேங்கியுள்ளது. மழை பெய்யும் சமயத்தில், கழிவு நீர் வயலுக்கு பாய்கிறது. வடிகால் கட்டமைப்பு வசதி சரியாக இல்லாததால், வயலில் கழிவு நீர் புகுந்துள்ளது. உள்ளாட்சி நிர்வாகம் வடிக்கால் வாய்க்காலை ஆழப்படுத்தி, சீரமைக்க வேண்டும்,' என்றனர்.