ஓமலுார் அரசு மருத்துவமனை 92 புள்ளி பெற்றதால் அந்தஸ்து உயர்வு
ஓமலுார்:ஓமலுார் அரசு மருத்துவமனை, 92.42 புள்ளிகள் பெற்றதால் அதன் அந்தஸ்து உயர்ந்துள்ளது.ஓமலுார் அரசு மருத்துவமனையில், கடந்த அக்., 14, 15, 16ல், டில்லி தேசிய தர நிர்ணய குழு ஆய்வு மேற்கொண்டது. இதையடுத்து தேசிய சுகாதார திட்டம் சார்பில், தமிழகத்தில் அதிக புள்ளிகளை பெற்ற, 7 அரசு மருத்துவமனை பட்டியல் நேற்று வெளியானது. அதில் ஓமலுார் அரசு மருத்துவமனை, 100க்கு, 92.42 புள்ளிகளை பெற்று சாதனை படைத்து, அதன் அந்தஸ்தை உயர்த்தியுள்ளது. இதை அறிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து ஓமலுார் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ஹெலன் குமார் கூறுகையில், ''92.42 புள்ளிகள் பெற்றதால் மருத்துவமனைக்கு கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் மக்களுக்கு மேலும் தரமான சிகிச்சை அளிக்க முடியும். தரச்சான்றிதழ் பெற காரணமாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டுகள்,'' என்றார்.