ஓமலுாரை தி.மு.க.,வுக்கு ஒதுக்க பாக முகவர்கள் வலியுறுத்தல்
ஓமலுார்:தி.மு.க.,வின் ஓமலுார் கிழக்கு ஒன்றியம் சார்பில் பாக முகவர் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஓமலுாரில் நடந்த கூட்டத்துக்கு ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமை வகித்தார். அதில் பேசிய கட்சி நிர்வாகிகள், பாக முகவர்கள், 'ஓமலுார் சட்டசபை தொகுதி பலமுறை கூட்டணி கட்சியினருக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சியினர், அவர்களாகவே ஒரு குழு அமைத்து அவர்களை வைத்தே தேர்தல் பணிகளை மேற்கொள்கின்றனர். தி.மு.க.,வினரை கண்டு கொள்வதில்லை. இதனால் வரும் சட்டசபை தேர்தலில், ஓமலுார் தொகுதியை, தி.மு.க.,வுக்கு ஒதுக்க வேண்டும்' என பேசினர்.தொடர்ந்து ஓமலுார் தொகுதி தேர்தல் பார்வையாளர் சுகவனம் பேசுகையில், ''எனக்கும், தி.மு.க.,வுக்கு ஒதுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. இதுகுறித்து கட்சி தலைமைக்கு தகவல் அளிக்கப்படும். மீண்டும், தி.மு.க., கோட்டை என நிரூபிக்க, வரும் தேர்தலில் ஓமலுார் தொகுதியில், 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.சேலம் மத்திய மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர்கள் குபேந்திரன், குப்புசாமி, மாவட்ட கவுன்சிலர் சண்முகம், ஓமலுார் பேரூர் செயலர் ரவி, ஓமலுார் டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி, முகவர்கள் பங்கேற்றனர். அதேபோல் பல்பாக்கியில், ஓமலுார் வடக்கு ஒன்றிய செயலர் பாலசுப்ரமணியம் தலைமையில் பாக முகவர்கள் கூட்டம் நடந்தது.