தொடரும் பஸ்கள் சிறைபிடிப்புடி.எஸ்.பி.,யிடம் மக்கள் புகார்
ஆத்துார்,மணிவிழுந்தான் பஸ் ஸ்டாப் வழியே செல்லாத தனியார் பஸ்களை, மக்கள் சிறைபிடித்து வருவது தொடர்கிறது. இதுதொடர்பாக அப்பகுதியினர், டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தனர்.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை, மணிவிழுந்தானில், அனைத்து அரசு, தனியார் டவுன், மப்சல் பஸ்கள் நின்று செல்ல, போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.அங்கு, 20 கோடி ரூபாயில் கட்டப்பட்ட மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்த பின், தனியார் பஸ்கள், பஸ் ஸ்டாப் உள்ள கீழ் பகுதியில் செல்லாமல் பாலம் வழியே செல்கின்றன. இதனால் கடந்த, 1, 2, நேற்று முன்தினம், மேம்பாலம் வழியே சென்ற பஸ்களை, மக்கள் சிறைபிடித்து, டிரைவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.இதில் நேற்று முன்தினம், கள்ளக்குறிச்சியில் இருந்து ஆத்துார் நோக்கி வந்த தனியார் பஸ், மேம்பாலத்தில் வந்ததால் மக்கள் தடுத்து நிறுத்தினர். டிரைவர் குமார், பஸ்சை அதே இடத்தில் நிறுத்திவிட்டு, தலைவாசல் போலீசில் புகார் அளித்தார். பஸ் மேலாளர், அந்த பஸ்சை எடுத்துச்சென்று, தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தினார். நேற்று தனியார் பஸ் டிரைவர், மக்களை வரவழைத்து, போலீசார் பேச்சு நடத்தினர்.ஸ்டாப் வழியே பஸ்சை இயக்குவதாக கூறிய பின், பஸ்சை எடுத்துச்சென்றனர். இருப்பினும், ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமாரிடம், மக்கள் மனு அளித்தனர். அவரும், 'மணிவிழுந்தான் பஸ் ஸ்டாப் வழியே செல்லாத பஸ்கள் குறித்து போக்குவரத்து துறை மூலம் கண்காணித்து அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, உறுதியளித்தார்.இதுகுறித்து தனியார் பஸ் டிரைவர்கள் கூறுகையில், 'பால பகுதியில் சர்வீஸ் சாலை சரியாக அமைக்கப்படாததால் அந்த வழியே செல்வதில் சிரமம் உள்ளது. நேர பிரச்னையில் சில நேரங்களில் பாலம் வழியே செல்ல வேண்டியுள்ளது' என்றனர்.