உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளி மாணவியிடம் நகை, லேப்டாப் பறிப்பு கேமராவில் வாலிபர் சிக்கியும் போலீசுக்கு சிக்கல்

பள்ளி மாணவியிடம் நகை, லேப்டாப் பறிப்பு கேமராவில் வாலிபர் சிக்கியும் போலீசுக்கு சிக்கல்

சேலம், சென்னையை சேர்ந்த பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி, அவரை சேலம் வரவழைத்து, நகை, லேப்டாப்பை பறித்துச்சென்ற வாலிபர் உருவம், கேமராவில் பதிவாகியும், சரிவர தெரியாததால், போலீசார் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த, 17 வயது மாணவி, பிளஸ் 2 படிக்கிறார். அவருக்கு, 'இன்ஸ்டாகிராம்' மூலம், ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்தார். தொடர்ந்து அவர் அறிவுரைப்படி, கடந்த, 1ல் சேலம் வந்தார். அப்போது அந்த மர்ம நபர், மாணவியை நுாதனமாக ஏமாற்றி, 3 பவுன் நகைகள், லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை பறித்துச்சென்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர். ஜங்ஷனில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்ததில், கழிப்பறை அருகே, அந்த மாணவியிடம் நகை, லேப் டாப் வாங்கிக்கொண்டு, அங்கிருந்து செல்வது பதிவாகியுள்ளது.இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மனோன்மணி கூறியதாவது: கேமராவில் பதிவான வாலிபரின் முழு உருவம் சரியாக தெரியவில்லை. அவர் ஓராண்டாக, ராகுல் என சொல்லி மாணவியிடம் பழகியுள்ளார். இருவரும் புகைப்படத்தை பரிமாறிக்கொண்டனர். மாணவியை, திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மாணவி, மொபைல் எண்ணை கேட்டபோது, 'நான் ஒரு அரசு உயர் அதிகாரி. என் நம்பரை தருகிறேன். ஆனால் யாரிடமும் சொல்லக்கூடாது' என கூறியுள்ளார். இந்நிலையில் தான் பார்க்க வேண்டும் என வரவழைத்து, நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார். மாணவியின் மொபைல் போன் வாலிபரிடம் உள்ளதால், கண்டுபிடிப்பதில் சிக்கல் நிலவுகிறது. இருப்பினும் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், விரைவில் வாலிபரை பிடித்து விடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை