5 மாதங்களுக்கு முன் மாயமான தாய், குழந்தைகளை மீட்ட போலீஸ்
சங்ககிரி, சங்ககிரி, மூலக்காட்டானுாரை சேர்ந்த லாரி டிரைவர் அருள், 36. இவரது மனைவி மணிமேகலை, 27. இவர்களது மகள் சஸ்வீதா, 11, மகன் சஸ்வீன், 9. தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.இதனால் கடந்த பிப்., 3ல், அருள் வேலைக்கு சென்றபோது, மனைவி, இரு குழந்தைகளுடன் மாயமானார். அருள், பிப்., 6ல் அளித்த புகார்படி, சங்ககிரி போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் அருள், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, சங்ககிரி போலீசார், அந்த குழந்தைகள் படித்த பள்ளி மூலம் அவர்கள் தற்போது எங்கு படிக்கின்றனர் என விசாரணை செய்தனர்.அதில் இரு குழந்தைகளும் சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் படிப்பது தெரிந்தது. நேற்று அந்த பள்ளிக்கு, சங்ககிரி போலீசார் சென்று விசாரித்தபோது, அங்கு குழந்தைகள் இருந்தனர். தொடர்ந்து மணிமேகலை, குழந்தைகளை மீட்டு, சங்ககிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்றனர். அவர்களை, உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான வேலைகளை, போலீசார் மேற்கொண்டனர்.