உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 1.13 கோடி சேலைக்கு மட்டுமே நுால் டெண்டர் அழைப்பு மேலும் 33 லட்சம் குறைப்பால் விசைத்தறியாளர் அதிருப்தி

1.13 கோடி சேலைக்கு மட்டுமே நுால் டெண்டர் அழைப்பு மேலும் 33 லட்சம் குறைப்பால் விசைத்தறியாளர் அதிருப்தி

ஈரோடு,இலவச சேலை உற்பத்திக்கு, 33 லட்சம் எண்ணிக்கையை குறைத்து நுால் டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளதால், விசைத்தறியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.தமிழக அரசு தை பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கார்டுதாரர், அந்தியோதையா அன்னயோஜனா திட்ட பயனாளிகள், விதவைகள், ஆதரவற்றவர் என, தலா, 1.77 கோடி சேலை, 1.77 கோடி வேட்டி உற்பத்தி செய்து வழங்கும். கடந்தாண்டு தாமதமாக ஆர்டர் வழங்கி, உற்பத்தியும் தாமதமானதால், பெரும்பாலானவர்களுக்கு முறையாக வேட்டி, சேலை சென்றடையவில்லை.வரும், 2026 தை பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை அறிவிப்பை அரசு வெளியிட்டது. கடந்தாண்டு உற்பத்தியில், 31.54 லட்சம் சேலை இருப்பு உள்ளதாக கூறி, 1 கோடியே, 46 லட்சத்து, 10,000 சேலைக்கும், 33.12 லட்சம் வேட்டி இருப்பு உள்ளதாக கூறி, 1 கோடியே, 44 லட்சத்து, 10,000 வேட்டி உற்பத்திக்கு மட்டும் அறிவிப்பு செய்தது. மொத்தம், 65 லட்சம் எண்ணிக்கை வேட்டி, சேலை உற்பத்தி குறைந்தது. இதனால் விசைத்தறியாளர்கள், 40 நாட்களுக்கு மேலான வேலைவாய்ப்பு, வருவாயை இழந்துள்ளனர்.இந்நிலையில் சேலை உற்பத்திக்கான நுால் டெண்டரை வெளியிட்டுள்ளனர். அதில், முதியோர் உதவித்தொகை பெறும், 33 லட்சம் பேருக்கான உற்பத்தியை கழித்துவிட்டு, 1.13 கோடி சேலை மட்டும் உற்பத்தி செய்யும் வகையில், 1,940 டன் நுாலுக்கு (ஒரு சேலைக்கு-170 கிராம் நுால் வீதம்) மட்டும் டெண்டர் ஆர்டர் வெளியிட்டுள்ளனர்.இதுபற்றி விசைத்தறியாளர்கள் கூறியதாவது: தி.மு.க., தேர்தல் அறிக்கையில், முழு அளவில் இலவச வேட்டி, சேலை பணியை விசைத்தறிகளுக்கு வழங்குவதாக உறுதியளித்தது. இதன் மூலம், 6 முதல், 7 மாதங்கள் விசைத்தறியாளர்கள் வேலைவாய்ப்புடன் வருவாய் பெறுவர்.கடந்தாண்டு இருப்பை காரணம் கூறி, 65 லட்சம் எண்ணிக்கையில் வேட்டி மற்றும் சேலையை குறைத்து அறிவித்தனர். தற்போது, 33 லட்சம் முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கான சேலை ஆர்டரை கைத்தறி, பெடல் தறிக்கு வழங்கும் எண்ணத்தில், விசைத்தறிகளுக்கான நுால் ஆர்டரை குறைத்து, 1.13 கோடி சேலை உற்பத்திக்கு தேவையான நுாலுக்கு மட்டுமே டெண்டர் அறிவித்துள்ளனர். இதனால் மேலும், ஒரு மாதத்துக்கு மேலான வேலைவாய்ப்பு, வருவாயை விசைத்தறியாளர்கள் இழக்கின்றனர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி