அவரை, பீன்ஸ் விலை சதம்
சேலம், டிச. 27-சேலம் மாவட்டத்தில், 13 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. அங்கு மட்டுமின்றி மார்க்கெட்டுகளிலும், அவரை, பீன்ஸ் விலை கிலோ, 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறியதாவது:அவரை அறுவடை சீசன், தற்போது தொடங்கி, பிப்ரவரி 2ம் வாரம் வரை இருக்கும். இவை தர்மபுரி, பனமரத்துப்பட்டி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடலுார், பண்ருட்டி பகுதிகளுக்கு, விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மழையால் அவரை செடிகளில் பூக்கள் கொட்டி விளைச்சல் குறைவாக உள்ளது. விளைச்சலாகும் காய்களிலும் கரும்புள்ளி தென்படுவதால் நோய் பாதிப்பு இருக்கிறது. இதனால் அறுவடை செய்யப்படும் அவரை தரமாக இல்லை. மார்க்கெட்டுக்கு, 20 சதவீதம் மட்டும் வரத்து உள்ளது. அதேபோல் பீன்ஸ், மேட்டுப்பாளையம், ராயக்கோட்டை, பெங்களூரு பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும். விளைச்சல் பாதிப்பால் தற்போது பெங்களூருவில் இருந்து மட்டும், 50 சதவீதம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் பீன்ஸ் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த, 1ல் உழவர் சந்தைகளில் அவரை கிலோ, 56 முதல், 66 ரூபாய், பீன்ஸ் கிலோ, 70 முதல், 80 ரூபாய்க்கு விற்பனையானது. இதை விட, வெளி மார்க்கெட்டில் கிலோ, 10 ரூபாய் உயர்ந்து விற்பனையானது. உழவர் சந்தையில் நேற்று அவரை, பீன்ஸ் கிலோ, 90 முதல், 100 ரூபாய், வெளி மார்க்கெட்டில், 120 ரூபாய்க்கு விற்பனையாகின.இவ்வாறு அவர் கூறினார்.