சிறுவன் மீது தாக்குதலை கண்டித்து மறியல் போராட்டம்
ஆத்துார்: இயற்கை உபாதைக்கு சென்ற சிறுவனை தாக்கிய, நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சாலைமறியல் போராட்டம் நடந்தது.ஆத்துார் அருகே, வளையமாதேவி, வால்கரடு பகுதியில் ஒரு பிரிவை சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும், மற்றொரு பிரிவை சேர்ந்த, 20 குடும்பத்தினரும் வசிக்கின்றனர். ஒரு பிரிவை சேர்ந்த சுரேஷ், 42, என்பவருக்கு வனப்பகுதியொட்டி விவசாய நிலம் உள்ளது. உள்ளூர், வெளியூரை சேர்ந்தவர்கள், வனப்பகுதிக்குள் மது அருந்த செல்வதால், சில தினங்களுக்கு முன், வழிப்பாதையில் முட்கள் வெட்டி போட்டுள்ளார்.நேற்று காலை, 8:00 மணியளவில் ஒரு பிரிவை சேர்ந்த, 16 வயது சிறுவன், இயற்கை உபாதைக்கு சென்றுள்ளார். அப்போது, வனப்பகுதி நுழைவில் போட்டிருந்த முட்களை அகற்றியுள்ளார். இதையடுத்து சிறுவனை, சுரேஷ் தாக்கியுள்ளார். இதையறிந்த சிறுவனின் பெற்றோர் ரவிக்குமார், சங்கீதா அங்கு வந்ததால், இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இதில் காயமடைந்த சிறுவன், அவரது பெற்றோர் மற்றும் மற்-றொரு தரப்பை சேர்ந்த சுரேஷ் ஆகியோர், ஆத்துார் அரசு மருத்து-வமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுவனை தாக்கியவர்கள் மீது, வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ் புலி கட்சியினர், சிறுவனின் உறவினர்கள் மதியம், 12:30 மணியளவில் ஆத்துார் அரசு மருத்துவமனை முன், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சிறுவன் தாக்கிய விவகாரம் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்-கப்படும் என, உறுதியளித்த பின் கலைந்து சென்றனர். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.