உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு நிதி ஒதுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
பனமரத்துப்பட்டி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வட்ட கிளை துணைத்தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி பேசினார். அதில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் ஏற்பாடுகளுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்து உடனே வழங்குதல்; போதிய கால இடைவெளியின்றி தொடர்ச்சியாக முகாம் நடத்துவதால், ஊராட்சியில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கின்றன என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், 'போராட்டத்தால் ஒரு முகாமுக்கு, 30,000 ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக, அரசின் தரப்பில் இருந்து, நேற்று மாலை தகவல் வெளியானது. ஒரு முகாமுக்கு, 1.50 லட்சம் முதல், 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும் நிலையில், 30,000 ரூபாய் போதுமானதாக இல்லை' என்றனர்.அதேபோல் அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலக வளாகத்தில், தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பி.டி.ஓ., குணலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர். காடையாம்பட்டி ஒன்றியத்தில் ஒருங்கிணைப்பாளர் ஜெயவேல் தலைமையிலும், நங்கவள்ளி ஒன்றியத்தில் மாவட்ட தணிக்கையாளர் பெருமாள் தலைமையிலும், அலுவலர்கள், அதிகாரிகள், ஊராட்சி செயலர்கள், கறுப்பு பட்டை அணிந்து, ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஓமலுாரில் இல்லைசேலம் மாவட்டத்தில், 20 ஒன்றியங்களில் போராட்டம் நடந்த நிலையில், ஓமலுார் ஒன்றியத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கவில்லை. அங்கு, 31 ஊராட்சி செயலர்கள், ஒன்றிய அலுவலகத்தில், 34 பேர் பணியில் இருந்தனர்.