அனல்மின் நிலையத்துக்கு நிலம் கொடுத்த 40 பேருக்கு வேலை வழங்க கோரிக்கை
அனல்மின் நிலையத்துக்கு நிலம் கொடுத்த40 பேருக்கு வேலை வழங்க கோரிக்கைமேட்டூர், நவ. 6-தமிழ்நாடு மின் உற்பத்தி கழக தலைவர் நந்தகுமார், நேற்று காலை, மேட்டூர், 840 மெகாவாட், மாலை, 600 மெகாவாட் அனல்மின் நிலையங்களில் ஆய்வு செய்தார். இதனிடையே மின் கழக பயணியர் மாளிகைக்கு, மதிய உணவு சாப்பிட வந்த தலைவரிடம், பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து, புதுரெட்டியூர், சின்னகாவூரை சேர்ந்த மேட்டூர் அனல்மின் நிலைய விவசாயிகள் போராட்ட குழு தலைவர் ராமசாமி, செயலர் மயில்சாமி மனு கொடுத்தனர்.அதில், 'மேட்டூர் புது அனல்மின் நிலைய கட்டுமான பணிக்கு ஏராளமான விவசாயிகள் நிலம் கொடுத்தனர். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக மின்கழகம் அறிவித்தது. இதுவரை, 162 பேருக்கு வேலை வழங்கிய நிலையில் இன்னும், 40 பேருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.அதேபோல் பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து, 4வது வார்டு கவுன்சிலர் ஸ்டாலின் அளித்த மனுவில், 'அனல்மின்நிலைய சாம்பல் துகள்களால் சின்னகாவூர், புதுரெட்டியூர், தாழையூர், ராமூர்த்தி நகர் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அப்பகுதி இளைஞர்களுக்கு அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த வேலை வழங்க வேண்டும்,' என கூறியிருந்தார். மேலும் டவுன் பஞ்சாயத்து, 17வது வார்டு கவுன்சிலர் திருமுருகன் மனுவில், 'அனல்மின் நிலைய ஏரியில் தேங்கும் சாம்பல் நீர் செல்வதற்கு தனியே ஓடை அமைக்க வேண்டும்,' என கூறியிருந்தார்.அனல்மின் நிலைய தலைமை பொறியாளர்கள் விவேகானந்தன், நவுசாத் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.