வைரம் விற்று ரூ.20 லட்சம் மோசடி விருதுநகரை சேர்ந்தவருக்கு காப்பு
சேலம், சேலம், பிரட்ஸ் சாலையை சேர்ந்தவர் பிரபு, 39. பள்ளப்பட்டியில், 'வி.ஜே.பி., டிரேடர்ஸ்' பெயரில் தங்கம், வைரம் வியாபாரம் செய்கிறார். இவருக்கு கடந்த ஆண்டு மார்ச்சில், சென்னையை சேர்ந்த புரோக்கர் கண்ணன் மூலம், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மணிமாறன், 39, என்பவர் அறிமுகமானார்.தொடர்ந்து அவர், சேலம் வந்து பிரபுவை சந்தித்து, 'தங்கம், வைரம் வாங்கி விற்கிறோம். நீங்கள் கற்களை கொடுத்தால், கூடுதல் விலைக்கு விற்றுத்தருகிறோம்' என்றனர். அதை நம்பி, இரு மாதங்களுக்கு முன், 5 ரோடு அருகே, ஒரு டீக்கடையில் பிரபு, இரு வைரக்கற்களை, மணிமாறனிடம் கொடுத்தார். அவர், ஒரு கல், 20 லட்சம் வீதம், இரு கற்களை விற்றுள்ளார். ஆனால் பிரபுவிடம், ஒரு கல் விற்கப்பட்டதாக கூறி, 20 லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டு, மீதி, 20 லட்சம் ரூபாயை தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.மணிமாறனை தொடர்பு கொண்டபோது, சரிவர பதில் அளிக்கவில்லை. அதிர்ச்சியடைந்த பிரபு, கடந்த ஆக., 12ல் அளித்த புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டதில், மணிமாறன் இரு கற்களையும் விற்றுவிட்டு, ஒரு கற்களின் பணத்தை தராமல் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் அவரை நேற்று, சேலம் வரவழைத்து, போலீசார் கைது செய்தனர்.