உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓய்வு தலைமை ஆசிரியர் இந்தியன் வங்கி முன் தர்ணா

ஓய்வு தலைமை ஆசிரியர் இந்தியன் வங்கி முன் தர்ணா

இடைப்பாடி, தன்னுடைய வங்கி கணக்கில் உள்ள பணத்தை தர மறுப்பதாக கூறி, ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர், நேற்று தேவூர் இந்தியன் வங்கி கிளை முன் தர்ணா செய்தார்.சங்ககிரி தாலுகா, மைலம்பட்டியை சேர்ந்தவர் அய்யாசாமி, 63. இவர் தேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி, 2022ல் ஓய்வு பெற்றுள்ளார். இவர் டாடா இண்டிகோ நிறுவனத்தில் தேவூர், அரசிராமணி செட்டிப்பட்டி பகுதி என இரு இடங்களில் ஏ.டி.எம்.,கள் வைக்க முகவராக பணியாற்றி வருகிறார்.ஏ.டி.எம்.,களில் பணம் வைப்பதற்காக, தேவூரில் உள்ள இந்தியன் வங்கியில் நடப்பு கணக்கு தொடங்கி, அதன் மூலம் தன் வங்கி கணக்கில் இருந்த பணத்தை பெற்று, தான் முகவராக உள்ள டாடா இண்டிகோ ஏ.டி.எம்., மையத்தில் பணத்தை நிரப்பி வந்துள்ளார்.தேவூர் இந்தியன் வங்கி கிளையில் இருந்து அய்யாசாமி, 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை தனது நடப்பு கணக்கில் உள்ள பணத்தை எடுத்து, ஏ.டி.எம்., மிஷினுள் வைத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக, இவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை முழுவதுமாக தராமல் குறைத்து தருவதாக கூறி, நேற்று தேவூர் இந்தியன் வங்கி கிளை முன்பாக தர்ணா செய்தார்.தர்ணா செய்தது குறித்து அய்யாசாமி கூறுகையில்,'' நான் ஓய்வு பெற்று அதன் மூலம் வந்த பணத்தை வைத்து, ஏ.டி.எம்., சர்வீஸ் மையம் நடத்தி வந்தேன். அதில் நிரப்புவற்கு என் கணக்கில் உள்ள பணத்தை கூட எடுக்க, வங்கி கிளை மேலாளர் சந்திரசேகர் மறுத்து, தினமும் குறைத்து தருகிறார். இதனால் நான் மட்டுமல்ல ஏ.டி.எம்., பணம் எடுக்க வரும் இப்பகுதியில் உள்ள கிராம மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கிளை மேலாளரின் செயலை கண்டித்து தர்ணா செய்தேன்,'' என்றார்.தேவூர் இந்தியன் வங்கி கிளை மேலாளர் சந்திரசேகர் கூறுகையில்,'' தேவூர் இந்தியன் கிளை வங்கிக்கு தினமும் வரும் பணத்தை, நகை அடகு வைக்கும் வாடிக்கையாளர்களுக்கும், வங்கி வாடிக்கையாளர்களுக்கு தரும் அளவு பணத்தை கணக்கு வைத்து தான், மீதமுள்ளவை ஏ.டி.எம்.,மில் நிரப்ப பணம் வழங்கப்பட்டு வருகிறது. மற்றபடி அவருக்கு தரக்கூடாது என்ற எண்ணம் இல்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ