ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
சேலம், ஜன. 1-பஞ்சப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள், ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகம் முன், வாயில் கறுப்பு துணி கட்டியபடி நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய, 109 மாத பஞ்சப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ்நாடு அரசு மதித்து நடக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மண்டல தலைவர் பழனிவேல் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக முதல்வர், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்; மவுனம் சாதிக்கக் கூடாது, ஆயுள் முழுவதும் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற பின்பு பண பலன்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம். காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைந்து, முறையாக செயல்படுத்த வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். மண்டல செயலாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.