உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முட்டல் - கல்லுார் சாலையில் விழுந்த பாறைகள்; 10 மலைக்கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

முட்டல் - கல்லுார் சாலையில் விழுந்த பாறைகள்; 10 மலைக்கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

ஆத்துார்: முட்டல் - கல்லுார் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதோடு, பாறைகள் உருண்டு விழுந்ததால், 10 மலைக்கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கல்லாநத்தம் ஊராட்சி, முட்டல் மலைக்கிராமத்தில் இருந்து கல்லுார் வரை தார்ச்சாலை உள்ளது. அதேபோல் ராமநாயக்கன்பாளையம் முதல், நாகலுார் வரை சாலை உள்ளது. சில நாட்களாக கல்வராயன்மலையில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் கொட்டி தீர்த்தது. இதில் முட்டல் - கல்லுார் சாலையில், 3 கி.மீ.,க்கு ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தவிர பாறைகள் உருண்டு வந்து சாலையில் விழுந்துள்ளன. மரங்களும் வேருடன் சாய்ந்துள்ளன. இதனால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மழைநீர் அதிகரித்து சாலையில் சென்றதால் பல இடங்களில் பள்ளமும் ஏற்பட்டுள்ளன. நீர்வீழ்ச்சி போன்று சாலையில் தண்ணீர் ஓடுகிறது.அதேபோல் ராமநாயக்கன்பாளையம் - நாகலுார் சாலையிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆத்துார் கோட்ட வருவாய்த்துறையினர், பொக்லைன் மூலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தமிழக அரசின் பழங்குடியின நலத்துறை ஆலோசகர் குழு உறுப்பினர் பொன்னுசாமி கூறியதாவது: கல்வராயன்மலையில் இருந்து முட்டல், ராமநாயக்கன்பாளையம் வழியே ஆத்துார் சென்று வருகிறோம். முட்டல் - கல்லுார் வரை, 10 கி.மீ., சாலை உள்ளது. கனமழையால், 3 கி.மீ.,க்கு மேல் மண் சரிவு, பாறைகள் உருண்டும், மழைநீர் ஓடியும், சாலை அதிகளவில் சேதமடைந்துள்ளது. இதனால் முட்டல், கல்லுார், வாரம், உப்பூர், அடியனுார், கிராங்காடு, சடையம்பட்டி, நாகலுார், ஆவாரை உள்பட, 10 மலைக்கிராமங்களுக்கு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையை விரைந்து சீரமைக்கக்கோரி, ஆத்துார் ஆர்.டி.ஓ., - தாசில்தாரிடம் தெரிவித்துள்ளோம். மழைநீர் வடிகால் வசதியுடன் சாலையை சீரமைக்க வேண்டும். மண் சரிவு, பாறைகள் விழாதபடி தடுப்புகள் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை