சேலம், சேலம் அடுத்த ஆண்டிப்பட்டி, கிழக்கு வட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 41; வெள்ளி பட்டறை தொழிலாளி. இவர், 2021ல், ஆண்டிப்பட்டி ஊராட்சி துணை தலைவராக இருந்தபோது, கலெக்டரிடம் அளித்த மனுவில், 'ஊராட்சி பகுதிகளில், பாதுகாப்பு வசதிக்கு, 'சிசிடிவி' கேமரா பொருத்தி குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்' என கோரியிருந்தார். இந்த மனு, சேலம் ஒன்றிய பி.டி.ஓ.,வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. எனினும் நடவடிக்கை இல்லை.இதனால் பொது தகவல் அலுவலரான, ஒன்றிய துணை பி.டி.ஓ.,வுக்கு, நிலுவை மனு தொடர்பான விபரம் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், அதே ஆண்டு நவ., 29ல் விண்ணப்பித்தும் பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து மேல்முறையீட்டு அலுவலரான, பி.டி.ஓ.,விடம், 2022 ஜன., 8ல் விபரம் கேட்டும் பலனில்லை. இதனால் பிப்., 11ல், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில், மேல்முறையீடு செய்தார்.இதுதொடர்பாக, 2025 ஆக., 21ல், சேலம் கலெக்டர் அலுவலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடந்தது. தகவல் ஆணையர் இளம்பரிதி விசாரித்தார். அப்போது, 'மனுதாரருக்கு, 5 ஆண்டாக பதில் அளிக்கவில்லை. மன உளைச்சல், பண விரயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மனுதாரருக்கு, 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மணிகண்டன், நேற்று, 10,000 ரூபாய்க்கு வரைவோலை பெற்றுக்கொண்டார்.இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், ''பி.டி.ஓ., செந்தில்முருகன், பொது நிதியில் இருந்து, 10,000 ரூபாய், 'டிடி' வழங்க, நான் பெற்றுக்கொண்டேன்,'' என்றார்.