வீராணம்: வீராணம் அருகே, சொத்து தகராறில் மருமகன் மீது மண்ணெண்ணை ஊற்றி
தீவைத்த மாமனார், மைத்துனர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டம், வீராணம் அடுத்த டி.பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர்
முருகன் (42). இவரது மனைவி ஈஸ்வரி (38). இருவருக்கும், 20 ஆண்டுக்கு முன்,
திருமணம் நடந்தது.இவர்களது மகள் மீனா (18), பத்தாம்வகுப்பு படித்துள்ளார்.
இரண்டாவது மகள் தமிழ்செல்வி (13), அங்குள்ள, அரசு மேல்நிலைப்பள்ளியில், 9ம்
வகுப்பு படித்து வருகிறார்.அதே கிராமத்தில் வசிக்கும் ஈஸ்வரியின் தந்தை
சுப்பிரமணியிடம், 10 ஆண்டுக்கு முன் முருகன், 60 ஆயிரம் ரூபாய்
கொடுத்துள்ளார். அதில், தலா 15 ஆயிரம் ரூபாயை பேத்திகள் மீனா, தமிழ்செல்வி
பெயரில் டிபாஸிட் செய்த சுப்ரமணி, மீதி பணத்தை திருப்பித் தரவில்லை.
அதனால், மாமனார், மருமகன் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், சுப்ரமணி, 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்ததால்,
அவர்களுக்குள் மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மீதி பணத்தை தரும்படி
முருகன் கெடுபிடி செய்துள்ளார்.இந்நிலையில், சுப்ரமணிக்கு சொந்தமான மூன்று
வீடுகளில், ஒரு வீட்டை தனக்கு எழுதிக் கொடுக்கும்படி, நேற்று முன்தினம்
முருகன் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த சுப்ரமணி, அவரது மகன்கள்
முருகன், வடிவேல், சுப்ரமணியின் தம்பிமகன் ராஜா ஆகிய நால்வரும் சேர்ந்து
முருகனை அடித்து, உதைத்துள்ளனர்.வீட்டைவிட்டு வெளியேறிய முருகன் அங்குள்ள,
மாரியம்மன் கோவிலில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணியளவில்
சுப்ரமணி மற்றும் அவரது மகன்கள் நால்வரும் சேர்ந்து, முருகன் மீது
மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில், முருகன் உடல் கருகினார்.தகவல் அறிந்து வீராணம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சம்பவ
இடத்துக்கு சென்ற போலீஸார், உயிருக்கு போராடிய முருகனை மீட்டு,
சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.சேலம் 4வது
மாஜிஸ்திரேட் ஸ்ரீவித்யா, நேற்று அதிகாலை 4.45 மணியளவில் மருத்துவமனைக்கு
சென்று, சிகிச்சையில் இருந்த முருகனிடம், விசாரணை நடத்தி வாக்குமூலம்
பெற்றார். அப்போது, மாமனார் மற்றும் உறவினர்கள் தன் மீது மண்னெண்ணை ஊற்றி
உயிரோடு தீ வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, போலீஸார்
மாமனார் சுப்ரமணி, மைத்துனர் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது.