உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புரட்டாசி மாதம் விரதம் எதிரொலி கடல் மீன் விலை வீழ்ச்சி

புரட்டாசி மாதம் விரதம் எதிரொலி கடல் மீன் விலை வீழ்ச்சி

சேலம் : புரட்டாசி மாதம் விரதம் துவங்கி உள்ளதன் எதிரொலியாக தமிழகத்தில் கடல் மீன்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டு, விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது மீன் வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் மீன் தேவையை கடலூர், நாகபட்டினம், சென்னை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடல்களில் பிடிக்கப்படும் மீன்கள் மூலம் நிவர்த்தி செய்யப்படுகிறது. இது மட்டுமின்றி ஆந்திரா, கேரளாவில் இருந்தும் தமிழகத்துக்கு மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சேலம் மாவட்டத்துக்கு, கடலூர், நாகை மாவட்டங்களில் இருந்து, தினசரி, 3 டன் மீனும், கேரள மாநிலத்தில் இருந்து, 2 டன் மீனும் விற்பனைக்கு வருவது வழக்கம். இந்நிலையில் செப்டம்பர், 18ல் புரட்டாசி மாதம் பிறந்தது. இந்த மாதத்தில் இந்துக்களில் குறிப்பாக வைணவர்கள் மட்டுமின்றி பிற பிரிவினரும் மீன், இறைச்சி, கோழி உள்ளிட்ட அசைவ உணவுகளை தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக சேலம் மட்டுமின்றி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மீன் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டது. வியாபாரிகள் மீனுக்கு வழங்கி வந்த ஆர்டரை குறைத்துக் கொண்டனர். இதனால், விற்பனைக்கு வரும் மீன்களின் அளவில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களுக்கு கேரளாவில் இருந்து விற்பனைக்கு வரும் மீனின் வரத்தில், 60 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்களின் விலையில், 40 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கிலோ, 35 ரூபாய்க்கு விற்ற மத்தி, நேற்று, 25 ரூபாய்க்கும், 60 ரூபாய்க்கு விற்ற கலங்கம், 30 ரூபாய்க்கும், வஞ்சீரம் பெரிய ரகம், 400 ரூபாய்க்கு விற்றது, 250 ரூபாயாகவும், சிறிய ரகம், 300 ரூபாய்க்கு விற்றது, 200 ரூபாயாகவும் சரிவை சந்தித்துள்ளது. சங்கரா, 100 ரூபாய்க்கு விற்றது, 35 ரூபாயாகவும், ஊழி, 150 ரூபாய்க்கு விற்றது, 110 ரூபாயாகவும், சுறா, பால் சுறா ஆகியவை கிலோ, 200 ரூபாய்க்கு விற்றது, 100 ரூபாயாகவும், கறி மீன் (மஞ்ச பாறை) கிலோ, 80 ரூபாய்க்கு விற்றது, 50 ரூபாயாகவும், வாவல், 300 ரூபாய்க்கு விற்றது, 200 ரூபாயாகவும், அயல, 100 ரூபாய்க்கு விற்றது, 70 ரூபாயாகவும் சரிவை சந்தித்துள்ளது. ஈரால் கிலோ, 250 ரூபாய்க்கு விற்றது, 180 ரூபாயாகவும், நண்டு கிலோ, 140 ரூபாய்க்கு விற்றது, 90 ரூபாயாக சரிந்துள்ளது. கடல் மீன்களின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ள போதிலும் உள்ளூர் மீன்களான ரோகு, கட்லா, மிருகு ஆகியவற்றின் விலையில் மாற்றமில்லை. இந்த மீன்கள் கிலோ, 80 ரூபாய்க்கு விற்கிறது. இது குறித்து சேலம் வ.உ.சி., மீன் மார்க்கெட் மீன் வியாபாரி சர்புதீன் கூறியதாவது: புரட்டாசி மாதம் எதிரொலியாக மீன்களின் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீன்களுக்கான ஆர்டரை நாங்கள், 50 சதவீதம் வரை குறைத்து விட்டோம். குறைந்த அளவில் வரும் மீன்களை ஹோட்டல்களுக்கும், கடையை தேடி வரும் குறைந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்கும் வழங்கி வருகிறோம். இதனால் தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் விற்பனைக்கு வரும் கடல் மீன்களின் வரத்து பாதியாக குறைந்து உள்ளது. மேலும் தீபாவளி பண்டிகை வரை இந்த நிலையே தொடரும், அதன் பின்னரே விலை பழைய நிலைக்கு வர வாய்ப்பு உள்ளது என்றார். தமிழகத்தின் முக்கிய மார்க்கெட்டுகள் அனைத்திலும் மீன்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அசைவ ஹோட்டல்களில் மீன் உணவுகளின் விலையில் எவ்வித மாற்றமும் நிகழ்த்தப்பட வில்லை.குறிப்பாக நடுத்தர அசைவ ஹோட்டலில் வஞ்சீரம் மீன் மூலம் தயார் செய்யப்படும் வறுவல் ஒரு பீஸ், 120 ரூபாய்க்கும், நண்டு வறுவல் ஒரு பீஸ், 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மார்க்கெட்டில் மீன் விலையில் சரிவு ஏற்பட்டுள்ள போதிலும் அந்த விலை தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை