உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கலெக்டர் அலுவலகத்தில் காதல் தம்பதியை தாக்கி பிரிக்க முயன்ற 9 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் காதல் தம்பதியை தாக்கி பிரிக்க முயன்ற 9 பேர் கைது

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, காதல் தம்பதியை தாக்கிய பெண்ணின் பெற்றோர் உள்பட, 9 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். சேலம் அடுத்த சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த நடராஜனின், 2வது மகள் சுகன்யா (19). காக்காபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், பி.இ., படித்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ராஜசேகர் (24), என்பவரும், மூன்றாண்டாக காதலித்து வந்துள்ளனர். கடந்த ஒருவாரத்துக்கு முன், காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறினர். இது குறித்து, மாணவியின் தந்தை நடராஜன், 'தனது மகளை, சக நண்பர்கள் உதவியுடன், ராஜசேகர், காரில் கடத்திச் சென்று விட்டதாக கன்னங்குறிச்சி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், தலைமறைவான காதல்ஜோடி, திருமணம் செய்து கொண்டு, நேற்று முன்தினம் பாதுகாப்பு கேட்டு, கலெக்டர் மகரபூஷணத்தை சந்தித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் மூலம், காதல் தம்பதிக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தகவல் அறிந்த சுகன்யாவின் பெற்றோர் உள்பட உறவினர்கள், கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்தனர். அவர்களை பார்த்தவுடன், காதல் தம்பதி அலுவலக அறைக்குள் மறைந்து கொண்டனர். அவர்களை, தேடி கண்டு பிடித்த கும்பல், ராஜசேகரை தாக்கி விட்டு, சுகன்யாவை இழுத்துச்சென்று விட்டனர். இதுகுறித்து, மாவட்ட சமூக நல அலுவலர் பேபிகீதாஞ்சலி சேலம் டவுன் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ' பெண்ணின் பெற்றோர் நடராஜன் (45), மணி (40), அண்ணன் செந்தில் (31) மற்றும் உறவினர்கள் கோவிந்தராஜ் (43), குமார் (30), வடிவேல் (29), மணி (22), கிருஷ்ணம்மாள் (50), செல்வம் (34) என இரு பெண்கள் உள்பட 9 பேர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நேற்றிரவு கைது செய்தார். இச்சம்பவம், சின்னகொல்லப்பட்டி, பெரியகொல்லப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி