உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பள்ளி ஆசிரியரை தாக்கி வழிப்பறி; புதிய சட்டத்தின் கீழ் இருவர் கைது

பள்ளி ஆசிரியரை தாக்கி வழிப்பறி; புதிய சட்டத்தின் கீழ் இருவர் கைது

ஆத்துார்: ஆத்துார் அருகே, பள்ளி ஆசிரியரை தாக்கி ஆறு பவுன் பறித்த இருவரை, மத்திய அரசு அறிவித்த புதிய சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மனைவி மகாலட்சுமி, 30. இவர், தனியார் பள்ளி ஆசிரியை. கடந்த, 2ல், தனது நான்கு வயது மகனுக்கு உடல் நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு, மொபட்டில் அழைத்து சென்றார். இரவு, 8:00 மணியளவில் தலைவாசலில் இருந்து, சார்வாய் ரயில்வே கேட் செல்லும்போது பைக்கில் வந்த இருவர், ஆசிரியை மகாலட்சுமியை தாக்கி, அவரது கழுத்தில் இருந்த ஆறு பவுன் தாலிக் கொடியை பறித்துச் சென்றனர்.இதுகுறித்து, தலைவாசல் போலீசார் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, 'ஹீரோ - ஹரீஸ்மா' பைக்கில் வந்த இருவர், நகையை அபகரித்து சென்றது தெரிந்தது. விசாரணையில் ஆத்துார் அருகே புங்கவாடி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த பச்சமுத்து மகன் தினேஷ், 24, தாண்டவன் மகன் ஆகாஷ், 19, ஆகியோர் என தெரியவந்தது.தலைவாசல் போலீசார், மத்திய அரசு அறிவித்த 'பாரதிய நியாய சன்ஹிதா' என்ற புதிய சட்டத்தின் கீழ், (304/2) வழக்கு பதிவு செய்து தினேஷ், ஆகாஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆறு பவுன் தாலிக் கொடி, வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் குற்ற சிண்டிகேட் சார்பாக செய்யப்படும் சைபர் கிரைம் போன்ற குற்றங்கள், இந்த சட்டத்தில் வழக்கு பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழிப்பறி செய்த புகாரில் கைதான இருவரும், பி.என்.எஸ்., எனும் புதிய சட்டத்தில் கைது செய்துள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ