சேகோசர்வில் ரூ.3.29 கோடி லாபம்: தொழில் துறை அமைச்சர் தகவல்
சேலம், ''கடந்த ஆண்டில், 522.28 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்து, 3.29 கோடி ரூபாய் சேகோசர்வ் லாபம் ஈட்டியுள்ளது,'' என, அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.சேலம் சேகோசர்வ் சங்கத்தில், வேதிப்பொருள் கலப்படம் இல்லாத ஜவ்வரிசி விற்பனை மற்றும் 2.60 கோடி ரூபாய் மதிப்பில், தரம் உயர்த்தப்பட்ட ஆய்வகத்தை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று தொடங்கி வைத்தனர்.தொடர்ந்து அமைச்சர் அன்பரசன் அளித்த பேட்டி:சேலம் சேகோசர்வ் ஆய்வகத்தில் தற்போது, 11 வகை பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணைய தரத்துக்கு மேம்படுத்த, 2.60 கோடி ரூபாய் மதிப்பில் நவீன உபகரணங்களுடன் கூடிய ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது. சேகோசர்வ் ஜவ்வரிசியை அனைவரும் வாங்கி பயன்பெற, வேதிப்பொருட்கள் கலப்படம் இல்லாத, 200 கிராம் ஜவ்வரிசி பாக்கெட் விற்பனையும் தொடங்கப்பட்டுள்ளது.ரசாயன கலப்பில்லாத ஜவ்வரிசி சார்ந்த பிற உணவு பொருட்களுக்கு புதிய வர்த்தக முத்திரை பதிவு செய்து, 'இண்ட்கோசர்வ்' சங்கத்துடன் இணைந்து, சேகோ - இண்ட்கோ உணவகங்களில் ஜவ்வரிசி சார்ந்த உணவுகள் விற்கப்படுகின்றன. இதன்மூலம் கடந்தாண்டில், 522.28 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்து, 3.29 கோடி ரூபாய் சேகோசர்வ் லாபம் ஈட்டியுள்ளது.மேலும் சேகோ தொழிலில் உள்ள பிரச்னைகள் குறித்து, பல்வேறு தரப்பினரும், கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர். இதனால் செப்., 2ல் மரவள்ளி உற்பத்தியாளர்கள், ஜவ்வரிசி வியாபாரிகள், அதிகாரிகளுடன், முத்தரப்பு கூட்டம் நடத்தி, பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.தொழில் கமிஷனர் நிர்மல்ராஜ், கலெக்டர் பிருந்தாதேவி, சேகோசர்வ் இயக்குனர் கீர்த்தி பிரியதர்ஷினி, தி.மு.க.,வை சேர்ந்த, மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி, பா.ம.க.,வின், சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள் உள்பட பலர் பங்கேற்றனர்.முன்னதாக, மாவட்ட தொழில் மையத்தின் முதலீட்டு மானிய திட்டத்தில், 50 லட்சம் ரூபாய் மானியத்துடன், 2 கோடி ரூபாய் கடன் உதவி பெற்று, மல்லுாரில் செயல்படும் விமான தயாரிப்பு பாகங்கள், ராணுவ தளவாட தயாரிப்பு தொழிற்சாலையை, அமைச்சர்கள் பார்வையிட்டனர்.