சேலம்: சேலத்தில் போலி வாரிசு சான்றிதழ் பெற்று, நிலத்தை அபகரித்து கொண்டவர்களிடம் இருந்து, நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும், என்று மூதாட்டி ஒருவர் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். சேலம், ஓமலூர், பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம். இவரது மனைவி பழனியம்மாள். இவரது கணவரின் வாரிசு என்று, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் போலியாக வாரிசு சான்றிதழ் பெற்று, நிலத்தை அபகரித்து கொண்டதாக, கலெக்டர் மகரபூஷணத்திடம், பழனியம்மாள் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் வெங்கடாஜலம், கடந்த 2004ம் ஆண்டு இறந்து விட்டார். எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. எனது கணவர் இறந்ததை அடுத்து, அவரது தங்கை அம்மணியம்மாள் என்பவரின் பாதுகாப்பில் இருந்து வருகிறேன். எனது மாமனார் குப்பபோயனுக்கு எனது கணவர் வெங்கடாஜலம்தான் ஆண் வாரிசு. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கஜேந்திரன் என்பவர், விவசாய நிலத்தில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டார். எனது கணவர் இறந்த நிலையில், கஜேந்திரன், மகன் என போலியாக வாரிசு சான்றிதழ் பெற்று, பட்டா பெயர் மாற்றம் செய்து கொண்டார். எனது கணவரின் ஒரே வாரிசாக நான் மட்டுமே உள்ளேன். போலி வாரிசு சான்றிதழ் பெற்று, எனது நிலத்தை அபகரித்து கொண்ட கஜேந்திரன், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகிறார். எனவே, போலி வாரிசு சான்றிதழ் பெற்று நிலத்தை அபகரித்து கொண்ட கஜேந்திரன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, நிலத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.