உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சூரமங்கலம், கோரிமேட்டில் முதியோர் மனமகிழ் மையம்

சூரமங்கலம், கோரிமேட்டில் முதியோர் மனமகிழ் மையம்

சேலம், தமிழக முதல்வர் ஸ்டாலின், மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்த, அன்புச்சோலை முதியோர் மனமகிழ் வள மையம் என்ற திட்டத்தை, திருச்சி மாவட்டத்தில், நேற்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, சேலம் கோரிமேடு வெங்கடேஸ்வரா நகரில் அன்புச்சோலை மையத்தில் நடந்த விழாவுக்கு, மேயர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், கோரிமேடு பகுதியில் அன்புச்சோலை மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. காலை, 10:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை செயல்படும் இம்மையத்தில், முதியவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உறுதிப்படுத்தும். முதியோர், தங்களது சம வயதினருடன் பழகுவதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, பகல் நேரத்தில் தனிமையில் அவதிப்படும் முதியோர்களுக்கு ஆறுதல் அளிக்கவும், மூத்த குடிமக்கள் இடையே சமூக தொடர்பான சூழலை உருவாகவே, இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. மதிய உணவு, மாலை நேர சிற்றுண்டி வழங்கப்படும். தகுதி வாய்ந்த் பராமரிப்பாளர்கள், சமூகப்பணியாளர்கள், உடல்நல சிகிச்சையாளர்கள் மூலம் ஆரோக்கியத்துக்கான வசதி, டிவி, தினசரி, மாத நாளிதழ், ஆன்மிக புத்தகம், நாவல், சிறுகதை உள்ளடங்கிய நுாலக வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் யோகா, உடற்பயிற்சி, குழு விவாதம் போன்ற பொழுதுபோக்கு அம்சம், விளையாட்டு சாதனங்களும் உண்டு.இவ்வாறு அவர் பேசினார். துணை மேயர் சாரதாதேவி உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ