சிவன் கோவில் நிலங்கள் அறநிலையத்துறை அளவீடு
மேட்டூர்:கொளத்துார், காவேரிபுரம் ஊராட்சியில் ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. மேட்டூர் அணை கட்டுமானப்பணியின் போது நீர்பரப்பு பகுதியில் இருந்த மக்கள் வெளியேறி, தற்போதைய பாலவாடியில் குடியேறினர்.அணையில் இருந்த கோவிலுக்கு பதில் பாலவாடியிலும் ஜலகண்டேஸ்வரர் கோவில் கட்டி வழிபட்டனர். இக்கோவில் மேட்டூர் - பாலாறு நெடுஞ்சாலையோரம் உள்ளது. அதன் மறுபுறம் சித்தேஸ்வரர் கோவில் உள்ளது. இரு கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக, அறநிலையத்துறைக்கு புகார்கள் சென்றன.இதனால் நேற்று முன்தினம் அறநிலையத்துறை நில அளவையர் தினேஷ்குமார் உள்ளிட்டோர், செயற்கைக்கோள் சிக்னல் உதவியுடன், கோவில் நிலத்தை அளவீடு செய்தனர். நேற்று, 2ம் நாளாக நில அளவீடு பணி நடந்தது. இப்பணி முடிந்த பின், ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும் என, அறநிலையத்துறை அலுவலர்கள் கூறினர்.