சேலத்தில் பட்டாசுகள் தேக்கம் தற்காலிக வியாபாரிகள் கவலை
சேலம், நவ. 1-சேலத்தில் பெரும்பாலான பட்டாசு கடைகளில் பாதிக்கும் மேற்பட்ட பட்டாசுகள் விற்காமல் தேக்கம் அடைந்ததால் தற்காலிக வியாபாரிகள் கவலை அடைந்தனர்.தீபாவளி பண்டிகைக்கு சேலம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க, 312 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடைசி இரு நாட்களுக்கு அதன் விற்பனை களைகட்டும் என்பதால் கோடிக்கணக்கில் பட்டாசுகளை வாங்கி குடோன்களில் வியாபாரிகள் குவித்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த வியாபாரமின்றி பெரும்பாலான கடைகளில், 50 சதவீதத்துக்கு அதிகமான பட்டாசுகள் தேக்கம் அடைந்தன.இதுகுறித்து பட்டாசு வியாபாரிகள் கூறியதாவது: நடப்பாண்டு பட்டாசு கடைகள் நடத்த பல்வேறு கெடுபிடிகள் இருந்தன. இதனால் வழக்கத்தை விட குறைந்த அளவு கடைகளே அமைக்கப்பட்டன. இதற்கேற்ப விற்பனை அதிகரிக்கும் என, முன்கூட்டியே பட்டாசுகளை வாங்கி, அதிகளவில் இருப்பு வைத்தோம். ஆனால் வாங்கியதில் பாதி பட்டாசுகள் கூட விற்கவில்லை. இவற்றை விற்று காசாக்க வேண்டும் என்றால் அடுத்த தீபாவளி வரை காத்திருக்க வேண்டும். பட்டாசு விலையில், 20 சதவீத விலை உயர்வு, மாத கடைசியில் வந்த தீபாவளி உள்ளிட்டவையும் காரணமாக இருக்கலாம். மழையில்லாதபோதும் பட்டாசு விற்பனை பிசுபிசுத்தது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.