2ம் நாளாக பள்ளியை புறக்கணித்த மாணவர்கள்
மேட்டூர், மேட்டூர், பாலமலை ஊராட்சி, ராமன்பட்டியில் உள்ள உறைவிட பள்ளி, 10ம் வகுப்பு மாணவர் பார்த்திபன், 15. இவர் அருகிலுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக ஆசிரியர் குமார், சமையலர், துாய்மை பணியாளர் என, 5 பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். ஆசிரியர் குமார் சிறப்பாக பாடம் நடத்தியதால், இரு ஆண்டுகள், 10ம் வகுப்பில் படித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தகவல், நேற்று முன்தினம் மாணவர்களின் பெற்றோருக்கு தெரியவந்தது.இதனால் அவரை மீண்டும் பள்ளியில் நியமிக்கக்கோரி, நேற்று முன்தினம், 40 மாணவ, மாணவியர், பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். 2ம் நாளாக நேற்றும், 45 மாணவர்கள், வகுப்பறைக்கு செல்லாமல், பள்ளியை புறக்கணித்தனர். மதியம் வரை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பின் வீடுகளுக்கு புறப்பட்டனர். மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார் கூறுகையில், ''விரைவில் பேச்சு நடத்தி தீர்வு காண்போம்,'' என்றார்.