சேலம் : மேட்டூர், கருமலைக்கூடலை சேர்ந்தவர் லல்லுபிரசாத், 37. இவரது நண்பர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு தரப்பினரான ராஜேஷ், சதீஷ்குமார், கோகுலக்கண்ணனுக்கும், முன் விரோதம் உள்ளது. 2015 ஜூலை, 5ல், கருமலைக்கூடல் மாரியம்மன் திருவிழாவில், லல்லுபிரசாத் தரப்பினர், கோகுலக்கண்ணனை தாக்கியதாக புகார் எழுந்தது. மறுநாள் வேறு கொலை வழக்கில் விசாரிக்க, கோகுலக்கண்ணனை, கருமலைக்கூடல் ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்துச்சென்றனர்.விசாரணையின்போது கோகுலக்கண்ணன் மயங்கி விழுந்ததாகவும், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நிலையில் அவர் இறந்ததாகவும், போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து லல்லுபிரசாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.சேலம் மாவட்ட குற்றப்பிரிவினரால் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. நேற்று முன்தினம் நீதிபதி ரவி தீர்ப்பு வழங்கினார்.அதில், 'போலீஸ் விசாரணையின் போது கோகுலகண்ணன் தாக்கப்பட்டு இறந்துள்ளார் என்பதால், அதில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், போலீசார் மீது மேல்நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி, டி.ஜி.பி., - சேலம் மாநகர போலீஸ் கமிஷனர், எஸ்.பி.,க்கு தீர்ப்பு நகல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் லல்லுபிரசாத் தாக்கியதால் இறக்கவில்லை என்பதால் அவர் விடுவிக்கப்படுகிறார். கோகுலக்கண்ணன் பெற்றோருக்கு, உரிய இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது' என்றார்.