அழகிரிநாதர் கோவில் கும்பாபிேஷக விழா இன்று யாகசாலை பூஜையுடன் துவக்கம்
சேலம்:கோட்டை அழகிரிநாதர் கோவில் கும்பாபிேஷக விழா இன்று (ஏப்.,18) யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது.சேலத்தில், பிரசித்தி பெற்ற கோட்டை அழகிரிநாதர் கோவில் கும்பாபிேஷக விழா நாளை மறுநாள் (ஏப்.,20ல்) நடக்கிறது. முறைப்படி விழா இன்று காலை 8:30 மணிக்கு குருமார்கள் அழைப்பு, யஜமானர்கள் சங்கல்பம், யாகசாலை சுத்தி செய்தல் ஆகியவை நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு மேல் புற்றுமண் எடுத்து, அங்குாரர்ப்பணம், யாகத்துக்கான தீயை இயற்கையாக கடைந்து எடுத்து யாகசாலை பூஜை, பாலாலயம் செய்யப்பட்டுள்ள பிம்பங்களில் இருந்து இறை சக்தியை கும்பங்களில் ஆவாஹனம் செய்தல் ஆகியவை நடக்கிறது.நாளை காலையில் இருந்து, இரவு வரை மூன்று கால யாக பூஜை, நாலாயிர திவ்ய பிரபந்தம் சாற்றுமுறை நடக்கும். ஏப்., 20 காலை 6:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 8:00 முதல் 9:00 மணிக்குள் நான்கு கால யாகபூஜை மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடையும். 9:30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள் எடுத்து வரப்பட்டு, பட்டாச்சாரியார்களால் கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபி ேஷகம் நடத்தப்படும்.தொடர்ந்து மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜர், சுந்தரவல்லி தாயார் ஆகியோருக்கு புனிதநீரால் திருமஞ்சனம் செய்து, சர்வ அலங்காரத்தில் விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு மேல் 6:00 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம். இரவு 7:00 மணிக்கு அழகிரிநாதர் தாயார்களுடன் திருவீதி உலா நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை முதல் மதியம், 12:00 மணி வரை பக்தர்கள் மூலவர் கருவறை வரை சென்று அழகிரிநாதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.